தாண்டிக்குடி அருகே உள்ள பெரும்பாறை வனப்பகுதியில் காட்டுத் தீ: வனத்துறை திணறல்

பட்டிவீரன்பட்டி: தாண்டிக்குடி அருகே உள்ள பெரும்பாறை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயால் அரிய வகை மூலிகை செடிகள் நாசமாகி வருகின்றன. தீயை அணைக்க நவீன சாதனங்கள் இல்லாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவிலிருந்து பெரும்பாறைக்கு செல்லும் மேற்கு தொடர்ச்சி மலை மலைப்பாதை ஆரம்பமாகிறது. இந்த மலைப்பாதையின் வழியாக பெரும்பாறை, தாண்டிக்குடி மற்றும் பண்ணைக்காடு போன்ற முக்கிய ஊர்கள் உள்ளன. வெயில் காரணமாக மரம், செடி கொடிகள் காய்ந்து உள்ளன.

இந்த மலையில் உள்ள பூலத்தூர் மலை அடிவாரத்தில் உள்ள அய்யம்பாளையம் மருதாநதி அணை மேற்புறமுள்ள தாணிப்பாறை பகுதியில் நேற்று இரவிலிருந்து வனத்துறைக்கு சொந்தமான காடுகள் மற்றும் பட்டா காடுகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.  மலைப்பகுதியில் உள்ள மூலிகைகள், மரங்கள், அரிய வனவிலங்குகளும் மற்றும் இம்மலையில் கூடுகட்டி வாழும் பறவையினங்களும் இந்த காட்டு தீயினால் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன. வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ தடுப்பு கோடுகள் அமைப்பது, வனக்காவலர்கள் மூலமாக கண்காணித்து வருகின்றனர்.   

ஆனால், பட்டா நிலங்கள் மற்றும் வனத்துறையினருக்குச் சொந்தமான மலைப்பகுதியில் உள்ள காடுகளில் சமூக விரோதிகளால் காட்டுத் தீ ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. தீயை அணைக்க வனத்துறையினரிடம் போதிய நவீன வசதிகள் கொண்ட உபகரணங்கள் இல்லை. தீ பரவாமல் இருக்க பச்சையாக உள்ள மரங்களை வெட்டி போட்டு அணைக்கின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,‘‘ மலைப்பகுதியில் ஆண்டு தோறும் கோடை காலத்தில் தீ பரவி எரிவது வாடிக்கையாகி வருகிறது. பச்சை மரத்தின் கிளைகளை கைகளில் வைத்துக் கொண்டு தீயின் அருகாமையில் சென்று ஆபத்தான முறையில் தீயை அணைக்க முயற்சிக்கின்றனர்.

பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தினால் தீ கட்டுக்கடங்காமல் எரிகிறது. வனப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைப்பதற்கு நவீன வசதிகளை அரசு வனத்துறையினருக்கு வழங்கி எரிந்து வரும் தீயை அணைத்து, மலையில் உள்ள அரிய வகை மூலிகைகளையும், வன விலங்குகளையும் பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: