ஊரடங்கு கட்டுப்பாடு மீறல்; வாகனங்களில் ஹாயாக சுற்றும் பொதுமக்கள்: கடைகள், சந்தைகளில் சமூக விலகலும் குறைவு

சேலம்:  சுய ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி பொதுமக்கள் ஹாயாக வெளியில் சுற்றுவதாலும்,  மளிகை கடைகள், சந்தைகளில் அதிகரிக்கும் கூட்டத்தாலும் சமூக விலகல் கடைபிடிப்பு குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் காய்கறி, மளிகை, மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்க் தவிர மற்ற அனைத்து கடைகள், தொழில் நிறுவனங்கள்  மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காய்கறி, மளிகைப்பொருட்கள் வாங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. காய்கறி, மளிகை, மருந்து, பால் கடைகளில், ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பொருட்களை வாங்க வேண்டும் என்று உள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்த முடியும்.

ஆனால் சேலத்தில் பெரும்பாலான இடங்களில் செயல்பட்டு வரும் காய்கறி, மளிகைக்கடைகளில் சமூக விலகல் கடைபிடிப்பு குறைந்து காணப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் மளிகை, காய்கறிக்கடைகளில் கூட்டம், கூட்டமாக நின்று பொருட்களை வாங்குகின்றனர். இதனால் எளிதில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பொறுப்புணர்ந்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். மேலும் சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் ஹாயாக இளைஞர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். போலீஸ்  என்னதான் எச்சரித்தாலும், வழக்குப்பதிவு செய்தாலும் சாலையில் வெட்டியாக சுற்றுவது குறையவில்லை. இது போன்றவர்களை கட்டுப்படுத்தினாலே கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்திவிடலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: