கொரோனா வைரஸ் காரணமாக தியாகராஜ சுவாமி கோயிலில் ஆழித்தேரோட்டம் ரத்து?

திருவாரூர்: கொரோனா வைரஸ் காரணமாக திருவாரூரில் தியாகராஜ சுவாமி கோயிலில் மே 4ம் தேதி நடைபெற இருந்த ஆழித்தேரோட்ட விழா ரத்தாகலாம் என தெரிகிறது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும், அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டு பங்குனி திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மே மாதம் 4ம் தேதி ஆழித்தேரோட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சந்திரசேகர், முருகர் மற்றும் விநாயகர் என சுவாமி புறப்பாடு தினந்தோறும் நடைபெற்று வந்த நிலையில், கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக தியாகராஜ சுவாமி கோயில் கடந்த 21ம் தேதி அடைக்கப்பட்டு பூஜைகள் மட்டும் நடந்து வருகிறது. கடந்த 28ம் தேதி தியாகராஜசுவாமி தனக்கே உரிய அஜபா நடனத்துடன் சன்னதியிலிருந்து வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் ஏற்கனவே ஆழித்தேர் உட்பட அனைத்து தேர்களின் கூரைகள் பிரிக்கப்பட்டு கட்டுமான பணி துவங்க இருந்த நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக பணிகள் துவங்கபடவில்லை. ஆழித்தேர் கட்டுமான பணிக்கு குறைந்தபட்சம் 45 நாட்களாவது தேவை என்பதால் அதற்குரிய அவகாசம் இல்லாததால் இந்த விழா நடைபெறுமா என்ற அச்சத்தில் பக்தர்கள் இருந்து வருகின்றனர். இதில் பிரிக்கப்பட்ட ஆழித்தேர் மற்றும் கமலாம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஷ்வரர் உட்பட அனைத்து தேர்களின் மேற்பகுதி கூரை கொண்டு மூடும் பணி நேற்றுமுன்தினம் முதல் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கோயிலின் செயல் அலுவலர் கவிதா கூறுகையில், ஆழித்தேரோட்ட விழாவை முடிவு செய்யும் அதிகாரம் உள்துறைக்கு மட்டுமே இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கொரானோ வைரஸ் காரணமாக கால அவகாசம் என்பது குறைவாக இருந்து வருவதாலும், தற்போது கடும் வெயில் இருந்து வருவதாலும் தேரின் சிற்பங்கள் சேதமடையாமல் இருப்பதற்காக மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: