×

அதிகாரிகள் அலட்சியத்தால் தடை உத்தரவை மீறி ரூ1000 கொரோனா நிதிக்கு டோக்கன் வாங்க ரேஷன் கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்: சமூக இடைவெளி எல்லாம் காணாம போச்சு...

பள்ளிபாளையம்: தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரணத்தொகை ரூ1000 வாங்க, பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் உள்ள  ரேஷன் கடைகளில் டோக்கன் வாங்க நேற்று மக்கள், தடை உத்தரவையும் மீறி ஆயிரக்கணக்கில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், மளிகை பொருட்கள், மருந்துகளை வாங்க வெளியே வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து இடைவெளி விட்டு நின்று, தங்களுக்கு தேவையானவற்றை வாங்க வேண்டும் என அதிகாரிகள் மற்றும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

தடையை மீறுபவர்களை கைது செய்தும் வருகின்றனர். கொரோனா வைரஸ் நிவாணமாக தமிழக அரசு ரேஷன்  அட்டைதாரர்களுக்கு ரூ1000 வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. வரம் 2ம் தேதி முதல் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று பெரும்பாலான கடைகளில் டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கண்டுகொள்ளாத மக்கள், கூட்டம் கூட்டமாக ரேஷன் கடைகளுக்கு நேற்று படையெடுத்தனர். தவிர, ஆளும் கட்சியினரின் வீடுகளிலும் டோக்கன் வழங்கியதால்  அங்கும் ஏராளமானோர் திரண்டனர்.

குமாரபாளையம் நகராட்சி பகுதியிலும் இதே நிலை  நீடித்தது. ஊரடங்கு உத்தரவையும் மீறி பலரும் மாஸ்க் ஏதும் அணியாமல் கூட்டம் கூட்டமாக திரண்டனர். கூட்டம் கூடினால் கொரோனா வைரஸ் பரவும் என்பதற்காகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி எந்தவித அச்சமுமின்றி நின்றிருந்தனர். மாவட்டத்திலுள்ள கிராமப்புறங்களிலும் இதே நிலை நீடித்தது.  தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் கட்சி உள்ளாட்சி பிரமுகர்களின் வீடுகளில்,  ஊரடங்கை மீறி மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் ஏதும் இல்லாமல் மக்கள்  கூட்டம் அலைமோதியது. வைரஸ் தொற்றால் உயிர் போவதை காட்டிலும், அரசு வழங்கும் ஆயிரம்  ரூபாய் பெறுவதிலேயே மக்கள் ஆர்வம் காட்டினர்.

பயனாளிகளின்  வங்கி கணக்கிலேயே பணத்தை செலுத்தியிருந்தால் மக்களின் பாதுகாப்பு உறுதி  செய்யப்பட்டிருக்கும். ஆனால் டோக்கன் பெறவும், பணம் பெறவும், வீடுகளில் உள்ள  மக்களை வெளியில் கொண்டு வந்து விட்டத்தில் அரசு அதிகாரிகளின் ரேஷன் திட்டம்  பெரும் நோய் பரவுவதற்கு வசதி செய்வதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம்  தெரிவித்தனர்.

Tags : breach ,injunction ration shops ,crowds , Officers negligence, corona fund, ration shop, crowd
× RELATED மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க...