×

பேரிடர் காலங்களில் அரசியல் எல்லைக் கோடுகளைக் கடந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற திமுக ஒருபோதும் தயங்கியதில்லை: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: பேரிடர் காலங்களில் அரசியல் எல்லைக் கோடுகளை கடந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற திமுக ஒருபோதும் தயங்கியதில்லை என்று திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என திமுக தொடர்ந்து வலியுறுத்தியது. திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ’’ ப்ரையன் , பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கேட்டுகொண்டதின் பேரில் பாதிக்கப்பட்ட அம்மாநில தொழிலாளர்களுக்கு உரிய உதவிகள் கிடைத்திடச் செய்தோம்.திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களும் மக்களவை உறுப்பினர்களும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தங்கள் ஊதியத்திலிருந்து நிதி வழங்கி, மக்களைக் காக்கும் பணியில் தங்களின் பங்களிப்பைச் செலுத்தினர். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் என்பதால் திமுகவின் 98 சட்டமன்ற உறுப்பினர்களின் சார்பில் 1 கோடியே 2 லட்சத்து 90ஆயிரம் ரூபாயும், மக்களவை உறுப்பினர்கள் 23 பேர் சார்பில் தலா 1 லட்சம் என 23 லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும், கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காகத் திமுக அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது. தோழமைக் கட்சிகளின் மக்களவை உறுப்பினர்களும் தங்கள் சார்பில் நிதியளித்துள்ளனர். திமுக மாநிலங்களவை உறுப்பினர்களும் நிதி அளித்துள்ளனர்.அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் காணொலிக் காட்சி வழியாகவேணும் நடத்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டேன். பேரிடர் காலங்களில், அரசியல் எல்லைக் கோடுகளைக் கடந்த அறம் சார்ந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிடக் திமுக ஒருபோதும் தயங்கியதில்லை.திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பில் இருப்போர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்குட்பட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அச்சத்தைப் போக்கி, அனைத்து முனைகளிலும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியினைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா அச்சம் தணியும்வரை தனித்திருப்போம் - மனத்திடத்துடன் துணிந்திருப்போம் - எந்நாளும் மக்களுக்குத் துணையிருப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : MK Stalin ,DMK ,volunteers ,disaster ,frontier , DMK ,hesitated,dedication across political boundaries, MK Stalin's letter
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...