2 வாரங்களில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் அடுத்த மாதம் 30 வரை சமூக விலகல் நீட்டிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்,  மார்ச் 31: அமெரிக்காவில் இன்னும் 2 வாரங்களில் கொரோனா தொற்று பலி  எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்க கூடும் என்பதால், சமூக விலகலை ஏப்ரல் 30ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு நீட்டித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ்  பாதிப்பினால், வளர்ந்த நாடுகளில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவும் மிகக் கடுமையாகப்  பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 1.43 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா  தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2,509 பேர் பலியாகி  உள்ளனர். 4,700க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில்,  இங்கு பலியாவோர் எண்ணிக்கை 1 லட்சத்துக்கு அதிகமாக வாய்ப்புள்ளதாகவும்  இன்னும் 2 வாரங்களில் இறப்பு சதவீதம் அதிகரிக்கக் கூடும் என்றும்  நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப் ஏப்ரல் 30ம்  தேதி வரை சமூக விலகலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 16ம் தேதி சமூக விலகல் அறிவிக்கப்பட்டது. அப்போது 15 நாட்கள் இது அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே,  வெள்ளை மாளிகையில் காணொலி மூலம் செய்தியாளர்களுடன் உரையாடிய டிரம்ப்,  `‘அமெரிக்க பொது சுகாதாரத் துறையின் கொரோனா சிறப்பு குழுவின் ஆலோசகர்கள்  டாக்டர் டெபோரா பிக்ஸ், அந்தோனி பவுசியின் அறிவுரைப்படி வரும் ஏப்ரல் 30ம்  தேதி வரை சமூக விலகல் உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.

ஜூன் 1ம் தேதி முதல்  அமெரிக்கா பழைய நிலைக்கு திரும்பத் தொடங்கும்’’ என்று கூறினார். அதன்  பின்னர், ரோஸ் கார்டனில் கொரோனா குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில்,  ‘‘இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.  அமெரிக்க மக்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். இதன் மூலம் பலி எண்ணிக்கையை  ஓரளவாவது குறைக்க முடியும். இன்னும் இரண்டு வாரங்களில் உயிரிழப்பு  அதிகரிக்கக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போதைய தடுப்பு  நடவடிக்கைகள் எடுக்கப்படாதிருந்தால் இதுவரை 22 லட்சம் பேர் வரை பலியாகி  இருப்பார்கள்’’ என்று டிரம்ப் தெரிவித்தார்.

வெளியே வந்தால் 14,000-28,000 அபராதம்:

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் 20 மாகாணங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  ஆயிரத்தை கடந்து காணப்படுகிறது. ஆனால் டிரம்ப் அவசரநிலை பிரகடனம் செய்தபோது, 12 மாகாணங்கள் மட்டுமே பாதிப்புக்குள்ளாகி இருந்தன. பெரும்பாலான  நகரங்களில் ஊரடங்கை மக்கள் ஒழுங்காக கடைபிடித்தாலும் சில பகுதிகளில்  அத்துமீறல் நடக்கின்றன. இதைத் தொடர்ந்து நியூயார்க் உள்ளிட்ட முக்கிய  நகரங்களில் ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு 14,000 முதல் 28,000 வரை அபராதம்  விதிக்கப்படுகிறது.

தவிக்கும் நியூயார்க்  :

நியூயார்க் நகரில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை  கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 237 பேர் உயிரிழந்ததால் பலியானோர்  எண்ணிக்கை 728ல் இருந்து 965 ஆக உயர்ந்துள்ளது. ஒரு மாதத்தில்  இறந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை எட்டியுள்ளது. தற்போது 8,000 பேர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2,000 பேர் தீவிர  சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,500 பேர் வீடு  திரும்பி உள்ளனர்.

நேற்று மட்டும் 846 பேர் குணமடைந்து வீட்டுக்கு  அனுப்பப்பட்டுள்ளனர். அவசர தேவை கருதி 1,000 படுக்கைகள் கொண்ட  மருத்துவமனையும் 1,200 மருத்துவப் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

Related Stories: