டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2021 ஜூலை 23ல் தொடங்கும்: ஐஓசி அறிவிப்பு

டோக்கியோ: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, அடுத்த ஆண்டு ஜூலை 23ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்த ஆண்டு தொடர் வரும் ஜூலை 24ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்குவதாக இருந்தது.  அதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய விளையாட்டு அரங்கங்கள், சாலைகள், விடுதிகள் என ஏராளமான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தலைமையில் ஐஓசி தலைவர் தாமஸ் பாக், ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில், ‘வீரர்களின் நலன், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஒலிம்பிக் போட்டியை 2021க்கு தள்ளிவைப்பதாக’ அபே அறிவித்தார். ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் தொடர், 2021 ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) நேற்று அறிவித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நிர்வாகிகள் மற்றும் ஐஓசி இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

Related Stories: