கொரோனாவால் அனைத்து தொழில்களும் முடக்கம் பெரும் பொருளாதார சீர்குலைவை எதிர்கொள்ள தயாராக இருங்கள்: ஜி.டி.பி. 2% ஆக குறையும் அபாயம்

* மக்களுக்கு சரத் பவார் எச்சரிக்கை

மும்பை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து தொழில்களும் முடங்கி போயிருப்பதால் ஏற்படப் போகும் பெரும் பொருளாதார சீர்குலைவை எதிர்கொள்ள நாட்டு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் எச்சரித்துள்ளார். சரத் பவார் நேற்று சமூக வலைதளம் மூலம் மகாராஷ்டிரா மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது தன்னிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளதாவது: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நமது நாட்டில் அனைத்து தொழில்களும் முடங்கிப் போயிருக்கின்றன.

நாட்டின் ஜி.டி.பி. (மொத்த உள்நாட்டு உற்பத்தி) 2 சதவீதமாக குறைந்து விடும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். அதுபோன்ற மோசமான பொருளாதார சூழலில் நமது நாடு உள்ளது. அனைத்து தொழில்களும் முடங்கிப் போயிருப்பதால் ஏற்படப் போகும் பொருளாதார சீர்குலைவை எதிர்கொள்ள மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த சில வாரங்களுக்கேனும் தேவையற்ற செலவுகளை தவிர்க்குமாறு மக்களை கேட்டுக் கொள்கிறேன். இப்போதைய சூழலில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் அனைவரும் தத்தமது வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் அல்லது உங்களை வீட்டில் தங்கியிருக்கச் செய்ய போலீஸ் படையை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இது நாம் தீவிரமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம். குறிப்பாக இளைஞர்கள் எந்த காரணமுமின்றி தெருக்களில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். மகாராஷ்டிரா அரசு முதிர்ச்சியுடன் நடந்து கொள்வதை யாரும் பலவீனமாக கருதிவிட வேண்டாம். மாநில அரசிடம் தேவையான அளவுக்கு உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளது. ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் அத்தியாவசிய உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: