கொரோனா சிகிச்சை பெற்று திரும்பியவர்களுக்கு மக்கள் ஆதரவுக்கரம் கொடுக்க வேண்டும்: மனநல ஆலோசகர் அபி சங்கரி பேட்டி

கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களையும், தனிமைப்படுத்தப்பட்ட நபர்களையும் எவ்வாறு கையாள்வது? அவர்களுக்கு எந்த விதமான ஊக்கத்தை மனதளவில் பொதுமக்கள் கொடுக்க வேண்டும் என்பது குறித்து மனநல ஆலோசகர் அபி சங்கரி கூறியதாவது:

* கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று திரும்பியவர்களுக்கு எது அவசியம்?
Advertising
Advertising

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மன ரீதியாக தைரியம் மிகவும் அவசியம். இதேபோல், கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி சிகிச்சைபெற்று திரும்பிய நபர்கள் அதுகுறித்து நல்ல விஷயங்களை மற்றவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். சாதகமான எண்ணங்களை மட்டுமே யோசிக்க வேண்டும். அதையே வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுகுறித்தே மற்றவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். பாதகமான எண்ணங்கள் குறித்து யோசிக்க கூடாது. சூழ்நிலையை சாதகமாக கையாள வேண்டும். குறிப்பாக, உடற்பயிற்சி மிகவும் அவசியம். யோகா போன்றவற்றை வீட்டிலேயே இருந்து செய்ய வேண்டும்.  

* கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று திரும்புபவர்களை பொதுமக்கள் எவ்வாறு கையாள வேண்டும்?

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று திரும்புபவர்களுக்கு பொதுமக்கள், அருகில் இருப்பவர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் நல்லவற்றையும், மனதளவில் அவர்கள் மீண்டு வருவதற்கான கருத்துக்களைமட்டுமே பேச வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியவர்களும் மற்றவர்களிடம் நிறைய பேச வேண்டும். தங்களுடைய எண்ணங்களை தெரிவிக்க வேண்டும். நல்ல கருத்து பரிமாற்றம் அவசியம்.

கொரோனாவல் ஏற்பட்ட சாதகமான சூழ்நிலைகள் குறித்த தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளங்களில் எழுத வேண்டும். குறிப்பாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நபர்களுக்கு மனரீதியான ஊக்கம் மிகவும் அவசியம். பொதுமக்கள் அவர்களை வேறு விதமாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

* தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் மன அழுத்தத்தை எவ்வாறு குறைக்க வேண்டும்?

தனிமைப்படுத்தப்பட்டதால் அவர்கள் மனரீதியாக பாதிப்பை சந்திக்கிறார்கள். அவர்கள் இதை தாண்டி செல்ல வேண்டும். இந்த நிலை அவர்களுக்கு மிகவும் கஷ்டமாகவே இருக்கும். எனவே, எங்களை போன்ற அனுபவம் வாய்ந்த மனநல ஆலோசகர்களுடன் பேச வேண்டும். பயத்தில் இருந்து வெளியே வருவது குறித்தும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பேச வேண்டும். சுற்றியுள்ள நபர்கள் அவர்களை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம்.

* மனநல ஆலோசனையின் போது தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?

வருங்காலத்தை பற்றி தெளிவுபடுத்திக்கொள்வது குறித்து அவர்களுக்கு சொல்கிறோம்.  வரக்கூடிய காலகட்டங்களில் இதுபோன்ற நிலை வந்தால் எவ்வாறு எதிர்கொள்வது. இதுபோன்ற நிலையை எவ்வாறு அவர்கள் சாதகமாக பயன்படுத்திக்கொள்வது குறித்தும் பேசப்படுகிறது. நேரடியாக வரமுடியாததால் அவர்களுக்கு ஆன்லைன் மூலமும் கவுன்சிலிங் எடுக்கப்படுகிறது. இதேபோல், பொதுமக்களுக்கு இதுகுறித்த விரிவான எண்ணம் தேவை. பொதுமக்களும் எது முக்கியம் எது தேவையில்லாத விஷயம் போன்றவற்றை அறிந்துகொள்ள வேண்டும். கொரோனா குறித்து சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் அனைத்தையும் நம்பக்கூடாது.  

* ஊரடங்கு நீட்டித்தால் என்ன ஆகும்?

பொதுவாக வீட்டிலேயே இருக்கும் போது கோபம் அதிகமாக வரும். வியாபாரம் சார்ந்த நபர்களுக்கு மன அழுத்தம் மிகவும் அதிகமாக இருக்கும். எனவே, இந்த நேரத்தை எவ்வாறு சாதகமாக பயன்படுத்துவது போன்றவை குறித்து பொதுமக்கள் விரிவாக தெரிந்துகொள்ள வேண்டும். புத்தகம் படிப்பது, கதைகளை பேசுவது, பழைய நினைவுகளை பறிமாறிக்கொள்வது போன்றவை நமக்கு உடல் அளவிலும், மனதளவிலும் புத்துணர்ச்சியாக இருப்பதற்கு உதவியாக இருக்கும்.

Related Stories: