×

‘கோவிட்-19’க்கு சிகிச்சை மருத்துவக்கழிவுகளை கையாள்வது எப்படி? மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம்

சென்னை: ‘கோவிட்-19’க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள், நோய் குறித்து பரிசோதனை செய்யும் ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றில் உருவாகும் மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் கையாளும் வகையில் பல்வேறுவித வழிகாட்டுதல்களை மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ளது. தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் விவரம்: ஹெச் 1 என்1, எச்ஐவி நோயாளிகளிடமிருந்து கிடைக்கும் கழிவுகள் எப்படி கையாளப்படுகிறேதோ, அப்படி இந்த கழிவுகளை கையாளும் வகையில் விதிமுறைகள் உள்ளது. அதன்படி கோவிட்-19 தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உருவாகும் கழிவுகளை, ‘பிரத்யேகமான வண்ணம் கொண்ட பின்கள்/பைகள்/கொள்கலன் வைத்து முறையாக கழிவுகளை கையாள வேண்டும்.

கோவிட்-19க்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் இருந்து கழிவுகளை சேகரிப்பதற்கு இரட்டை அடுக்கு கொண்ட 2 பைகளை பயன்படுத்த வேண்டும். இதனால் பைகள் வலிமையாகவும், கசிவுகள் இல்லாமலும் இருக்கும். கழிவுகளை அங்கீகரிப்பட்ட ஊழியர்களிடம் ஒப்படைப்பதற்கு முன்பு, தற்காலிக சேமிப்பு அறைகளில் தனித்தனியாக வைக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட வார்டுகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் ‘கோவிட்-19’ கழிவு என்று எழுதப்பட வேண்டும். இந்த வார்டுகளில் இருந்து உருவாகும் கழிவுகளை தனி பதிவேட்டில் பராமரிக்க வேண்டும். பிரத்யேக தள்ளுவண்டி, சேகரிப்புத் தொட்டிகளை பயன்படுத்த வேண்டும்.

கோவிட்-19 கழிவுகளை சேமிக்க பயன்படுத்தப்படும் கொள்கலன்கள், பின்கள், தள்ளுவண்டிகளின் உள் மற்றும் வெளிப்புற மேற்பரப்பை 1 சதவீத சோடியம் ஹைபோகுளோரைட் கரைசலுடன் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்பது உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன. இதேபோல் கோவிட்-19 சந்தேகத்திற்கிடமான நோயாளிகளுக்கான மாதிரி சேகரிப்பு மையங்கள் மற்றும் ஆய்வகங்கள்; முகாம்கள் மற்றும் வீட்டு பராமரிப்பு; பொதுவான பயோமெடிக்கல் கழிவு சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவற்றுக்கும் பல்வேறு விதமான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

மேலும் மாநில மாசுக்கட்டுபாட்டு வாரியங்கள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களுக்கும் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ‘கொவிட்-19 சிகிச்சை வார்டுகள், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளின் பதிவுகளை பராமரிக்க வேண்டும். விதிகளின்படி உயிரியல் மருத்து கழிவுகளை முறையாக சேகரித்தல் மற்றும் அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

Tags : Kovit-19 , Times Covid-19, Medicines and Pollution Control Board
× RELATED 9/11 என்பது ஒரு அத்தியாயம்... கோவிட்- 19...