தனிமைப்படுத்த அதிரடி வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்தவர்கள் யார்? பட்டியல் தயாரிப்பு தீவிரம்

சென்னை: கொரோனா பரவியதை அடுத்து சீனா, ஹாங்காங்கில் இருந்து விமானம் மூலம் இந்தியா வரும் பயணிகளுக்கு கடந்த 15ம் தேதியில் இருந்து மருத்துவ பரிசோதனை தொடங்கியது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஜனவரி 20ம் தேதியில் இருந்து மத்திய, மாநில சுகாதாரத்துறையினர் இணைந்து மருத்துவ பரிசோதனையை தொடங்கினர்.இதில் ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இத்தாலி, ஈரான், ஜப்பான், தாய்லாந்து, குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளையும் பரிசோதனை செய்தனர். அந்த வகையில், பிப்ரவரி 15ல் இருந்து 22ம் தேதி வரை சுமார் 1.5 லட்சம் பயணிகள் சென்னை வந்துள்ளனர்.

Advertising
Advertising

இதுவரை சுமார் 50 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சுமார் ஒரு லட்சம் பேர் மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் மக்களோடு கலந்து விட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களது பெயர், முகவரிகளை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளிடம் மத்திய சுகாதாரத்துறை கேட்டுள்ளது.  இதனால் பயணிகள் இன்றி விமான நிலையம் வெறிச்சோடி கிடந்தாலும், குடியுரிமை அதிகாரிகள் பணிக்கு வந்து, பயணிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணியில் கடந்த 2 நாட்களாக இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.

இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல. பல மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அடங்குவர். எனவே சுகாதார துறையினர், அந்தந்த மாநிலம், மாவட்டவாரியாக பிரித்து அனுப்புவார்கள். அதன்மூலமாக தனிமைப்படுத்துதல் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படாதவர்களை அடையாளம் கண்டு, அவர்களை கட்டாயமாக தனிமைப்படுத்தி கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Related Stories: