×

வெளி மாவட்டங்களுக்கு செல்ல இரண்டு நாளில் 9 ஆயிரம் பேர் விண்ணப்பம்: தவறான தகவல் மூலம் பாஸ் வாங்க வேண்டாம்

* போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை

சென்னை: சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்ல மக்கள் தேவையில்லாமல் விண்ணப்பிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், இரண்டு நாளில் மக்களிடம் இருந்து 9 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு காரணமாக அவசர காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ள விரும்பும் பொதுமக்களுக்காக சென்னை மாநகர காவல் துறை சார்பில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது அறிவிப்பு வெளியான இரண்டு நாளிலேயே சென்னை முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். நேரில் விண்ணப்பிக்க நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 500க்கும் ேமற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது போலீசார் வெளியூர் செல்ல நேரடியாக விண்ணப்பிக்க ேநரில் வர வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் சரியாக தகவல் அளித்தால்போதும், அவசர நிலையை கொண்டு உரியவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்து அனுப்பி வைத்தனர். அப்போது ரத்த உறவுகள் இருந்தால் மட்டுமே பயண பாஸ் வழங்கப்படும். இந்நிலையில் 9 ஆயிரம் பேரில் இதுவரை 125 விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் ெசன்னையில் இருந்து வெளியே செல்ல போலீசார் அனுமதி சீட்டு  வழங்கி உள்ளனர்.  இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:“ 144 தடைக்காலத்தில் அவசர தேவைக்காக செல்பவர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்படுகிறது.

தங்களுடைய குடும்பத்தில் யாரேனும் இறந்தால் அதற்கு செல்வதற்காகவும், தங்கள் குடும்பத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் கலந்து கொள்வதற்கு, மருத்துவ அவசர தேவைகளுக்கு செல்பவர்களுக்கு மட்டுமே அவசர பயண பாஸ் வழங்கப்படுகிறது. இந்த மூன்று தேவைகளுக்கு மட்டுமே சிறப்பு பாஸ் வழங்கப்படுகிறது. விண்ணப்பிப்பவர்கள் அடையாள அட்டையும், திருமணம் என்றால் அதற்கான திருமண அழைப்பிதழ் இணைத்து விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள போலீசார் விசாரித்து, உண்மை தன்மையை வைத்தே பாஸ் வழங்கப்படும். மற்ற காரணங்களுக்காக பாஸ் வழங்கப்படமாட்டாது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஸ் வழங்கப்படுகிறது.  

சென்னை தவிர பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வருவதற்கும், சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்வதற்கும் ccwtnpolice@gmail.com என்ற இமெயிலில் விண்ணப்பிக்கலாம். இது தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு விண்ணப்பத்தின் உண்மை தன்மையை விசாரித்த பின்னரே பாஸ் வழங்கப்படும். யாரும் தவறான தகவல்களை கொடுத்து பாஸ் வாங்க முயற்சி செய்ய வேண்டாம். மற்ற மாநிலங்களில் வழங்கப்படும் சிறப்பு பாஸ் உடன் வரும் வாகனங்களை நம்முடைய மாநிலத்தில் அனுமதிக்கிறோம். அதே போல நாம் வழங்கும் பாஸ் உடைய வாகனங்களையும் மற்ற மாநில போலீசார் ஏற்றுக் கொள்வார்கள்.

சென்னையில் இருந்து பாஸ் வாங்கி விட்டு அவசர தேவைக்காக செல்பவர்கள் மீண்டும் வருகை தேதியை பதிவு செய்திருந்தால் அதே பாஸ் மூலம் வந்து விடலாம். நேற்று மட்டும் கிட்டத்தட்ட 9,000 விண்ணப்பங்கள் வந்துள்ளது. மூன்று காரணங்கள் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு பதில்கள் தாமதமாகவே கிடைக்கும். சரியான காரணத்தோடு விண்ணப்பியுங்கள். அதனை தவிர்த்து விண்ணப்பித்தால் சரியாக விண்ணப்பிப்பவர்களுக்கு பாஸ் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது”.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : districts , Outer Districts, Application, Boss, Police Commissioner AK Viswanathan
× RELATED வெப்ப சலனத்தால் 14 மாவட்டங்களில்...