டாஸ்மாக் கடை பாதுகாப்பிற்கு காவலர்களை நியமிக்க வேண்டும்: பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: டாஸ்மாக் கடைகளின் பாதுகாப்பிற்கு காவலர்களை நியமிக்க வேண்டும் என நிர்வாகத்திற்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் கோதண்டம் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் தாக்குதலை குறைப்பதற்கு தமிழக அரசு ஏப்ரல் 14 வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு தற்போது டாஸ்மாக் பணியாளர்களின் உயிருக்கு கேடாக விளையும் வண்ணம் புதிய உத்தரவு ஒன்றை டாஸ்மாக் தலைமை அலுவலகம் வழங்கியுள்ளது.

Advertising
Advertising

அதன்படி, ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள கடைகளில் மதுபானங்கள் திருடுபோக வாய்ப்பிருப்பதாக கருதி டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள் பணியாளர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு குறிப்பிட்ட கடைகளில் உள்ள சரக்குகளை அருகில் உள்ள டாஸ்மாக் கிடங்கு அல்லது திருமண மண்டபங்களில் கொண்டு வைக்குமாறு உத்தரவிட்டு வருகிறது. இது பணியாளர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கியுள்ளது.  இதேபோல், டாஸ்மாக் பணியாளர்களை கடையின் பாதுகாப்பிற்காக அங்கேயே தங்க சொல்கிறது. ஊரடங்கு உத்தரவால் யாரும் வெளியில்கூட வர இயலாத நிலையில் இதுபோன்ற உத்தரவுகள் பணியாளர்களை கொரோனா எனும் கொடிய நோய்தொற்றிக்கு ஆளாக்கும்.

இதுபோன்ற சமயங்களில் காவல்துறை மூலமோ அல்லது தனியார் நிறுவன காவலர்கள் மூலமாக டாஸ்மாக் கடைகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்க டாஸ்மாக் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எனவே, தற்போது இந்த சூழலில் டாஸ்மாக் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை கைவிட வேண்டும்.

Related Stories: