டெல்லிக்கு பயணம் செய்த 1,500 நபர்களால்தான் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: டெல்லிக்கு பயணம் சென்ற 1,500 பேரால் தான் தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் கிருமி ெதாற்று ஏற்பட்டு இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 11 குழுக்களை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டிஜிபி, திரிபாதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:  உலக அளவில் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 27 பேர் கொரோனா வைரஸ் தொற்று நோயால் இறந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் ஒருவர் மட்டும் தான் இறந்திருக்கிறார். தமிழகத்தை பொறுத்தவரைக்கும் நேற்று முன்தினம் வரை 50 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் கூடுதலாக 17 பேர் நேற்று கொரோனா வைரஸ் நோயால் தாக்கப்பட்டுள்ளார்கள்.  அவர்களையும் சேர்த்து 67 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டிருக்கின்றது. அவர்கள், முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று ஒரே நாளில் ஈரோடு 10 பேர், சென்னை 5  பேர், மதுரையில் 1, கரூர் 1 என 17 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  தமிழகத்தில், அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையோடு இணைந்து 17,089 படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருக்கிறது. தனியாரையும் சேர்த்து வென்டிலேட்டரின் எண்ணிக்கை 3,018. வீடுகளில் கண்காணிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 43,537. தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கண்காணிப்பில் இதுவரை இருந்தவர்களின் எண்ணிக்கை 1,641. கொரோனா வைரஸ் நோய் சந்தேகிக்கப்பட்டு உள்நோயாளியாக தனிப்பிரிவில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,925. கொரோனா தொற்று நோய் கண்டறியப்பட்டு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமாகி வீட்டிற்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5.

வெளியூர் செல்வதற்கு அனுமதி பெறுவதில் சிரமம் உள்ளதே? ஒன்று குடும்பத்தில் ஏதாவது இறப்பு ஏற்பட்டால் துக்க காரியங்களுக்கு செல்லலாம். ஏற்கனவே திருமணம் ஏற்பாடு செய்திருந்து, திருமணம் நடந்தால் அதற்கு அனுமதி அளிக்கப்படும். இரண்டாவது, குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால், மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென்றால் அனுமதி கொடுத்திருக்கிறோம். மற்ற எதற்கும் அனுமதி கிடையாது. எல்லோரும் வெளியே செல்ல வேண்டுமென்றால், 144 தடை உத்தரவு போடவேண்டிய அவசியமே இல்லை.

அனைத்து நியாய விலை கடைகளிலும் 1000 எந்த முறையில் வழங்கப்பட உள்ளது?  பொது விநியோக திட்டத்தின் மூலமாக மக்களுக்கு பொருட்களை எப்படி விநியோகிப்பது, குடும்பத்திற்கு 1000 ரூபாய் அரசு அறிவித்திருக்கின்றது, அதை எப்படி மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற விவரங்களையெல்லாம் தெளிவாக முடிவெடுத்து அறிவிக்கப்படும். அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிலைமைக்கேற்ப அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறோம்.

நிலவேம்பு கஷாயம் போன்று வேறு மருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படுமா?  இது மிகப்பெரிய தொற்று நோய், இந்த நோய்க்கு மருந்தே கண்டுபிடிக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர்கள் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனரே? எதிர்க்கட்சிகளை கொண்டு கூட்டம் நடத்துவதற்கு இதில் ஒன்றும் கிடையாது. இதில் எல்லோரும் கொரோனா பற்றி தான் பேச போகிறோம். வேறு ஒன்றும் பேச போவதில்லை. இதில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டுவதற்கோ, அரசியல் செய்வதற்கோ அவசியமில்லை.  ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் வர என்ன காரணம்? டெல்லிக்கு 1500 பேர் கொண்ட குழுவாக பயணம் சென்றிருக்கிறார்கள். அந்த குழுவில் சென்றவர்களுக்கு தான் இந்த தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஈரோட்டில் 24 பேருக்கு இருக்கிறது.

அதேபோல, இந்த குழுவில் சென்ற 1500 பேரில் 981 பேர் வந்துவிட்டார்கள், இன்றைக்கு அந்த 981 பேரையும் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த குழுவில் இடம் பெற்று சென்றவர்களால் தான் இவ்வளவு தொற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மின் கட்டணம் ரத்து செய்யப்படுமா?அரசாங்கத்தினுடைய நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். பொதுமக்களிடமிருந்து வருகின்ற பணத்தில் தான் அரசாங்கம் செலவு செய்கிறது. அரசாங்கத்திற்கு என தனியாக பணம் வருவதில்லை என்றார்.

வெளிமாநிலத்தை சேர்ந்த  1.50 லட்சம் பேருக்கு உணவு, தங்கும் வசதி

வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் நாம் என்னென்ன  உதவிகளை செய்தோமோ, அதே உதவியை மற்ற மாநிலங்களும் செய்ய வேண்டும் என்று  தெரிவித்திருக்கிறோம். அதற்குண்டான செலவை தமிழக அரசு கொடுக்கும் என்றும்  தெரிவித்திருக்கின்றோம். இன்றைக்கு மகாராஷ்டிராவில் 600 பேர் இருப்பதாக  தகவல் வந்திருக்கிறது. தமிழகத்தில் வெளிமாநிலத்தில்  இருக்கின்ற தொழிலாளர்கள் 1 லட்சத்து 49 ஆயிரத்து 394 பேர்.

அதில்  கட்டுமான பணியில் இருப்பவர்கள் 32,469 பேர். தினக்கூலி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு  அரசாங்கம் தங்குமிடம், உணவு, மருத்துவ வசதிகளை செய்து கொடுக்கிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Related Stories: