கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் உள்ள பகுதிகளில் வீடுவீடாக சல்லடை போட்டு பரிசோதனை

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ தூரத்துக்கு வீடு வீடாக சல்லடை போட்டு பரிசோதிக்கும் வகையில் அமைக்கப்பட்ட குழுவினர் தங்கள் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.   தமிழகத்தில் தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளைச் சுற்றி 8 கி.மீட்டர் தூரம் வரை தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், 50 வீடுகளுக்கு ஒரு நபர் என நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவில் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட கிராம சமூக பணியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் வீடுவீடாகச் சென்று நோய் தொற்று கண்டறியும் பணியை தொடங்கி விட்டனர்.

நேற்று காலை முதல் இப்பணி தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் குறிப்பாக நோய் தொற்று கண்டறியப்பட்ட சுற்று பகுதிகளில் உள்ள வீடுகளில் களப்பணியாளர்கள் சல்லடை போட்டு பரிசோதித்து வருகின்றனர். இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ள நபர்களை கண்டறிந்து, அவர்களை மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, வயதானவர்களின் விவரங்களையும் சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளதா என்பதையும் களப்பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.  பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடித்தாக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் களப்பணியாளர்கள் வீடு வீடாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Related Stories: