தமிழகத்தில் 144 தடை உத்தரவு காரணமாக வீடுகளுக்கான மின்பயன்பாடு 1,000 மெகாவாட்டுக்கு மேல் உயர்வு

சென்னை: தமிழகத்தில் 144 தடை உத்தரவு காரணமாக, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போதைய வீட்டு மின்பயன்பாடு ஆயிரம் மெகாவாட்டிற்கு மேல் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் தமிழகத்திலும் 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை பஸ், ரயில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் பொதுமக்கள் வெளியில் வருவதை குறைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றனர்.

Advertising
Advertising

முன்னதாக தொழிற்சாலைகள், ஷாப்பிங் மால்கள், அலுவலகங்கள் இயங்கி வந்தபோது, மின்தேவையின் அளவும் அதிகமாக இருந்தது. அதன்படி கடந்த மாதம் 28ம் தேதி (28.2.2020) ஒட்டுமொத்த மின்நுகர்வின் அளவு 15,094 மெகாவாட்டாக இருந்தது. இந்நிலையில் விடுமுறை காரணமாக தற்போது மின்தேவை மிகவும் குறைந்துள்ளது.

இம்மாதம் 28ம் தேதி நிலவரப்படி (28.3.2020) ஒட்டுமொத்த மின்நுகர்வின் அளவு 11,010 மெகாவாட்டாக குறைந்துள்ளது. ஆனால் மற்றொரு புறம் வீட்டு மின்நுகர்வு தற்ேபாது ஆயிரம் மெகாவாட்டிற்கு மேல் உயர்ந்துள்ளது.  இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: எப்போதும் மார்ச் மாதத்தின் பிற்பகுதி, ஏப்ரல், மே மாதங்களில் மின்சாரத்தின் தேவை அதிகமாக இருக்கும்.

இதற்கு வெயில் காரணமாக வீடுகளில் மின்சாதனங்களில் பயன்பாடு அதிகமாக இருப்பதே காரணம். இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த மின்நுகர்வு கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பு மாதத்தில் 4 ஆயிரம் மெகாவாட்டிற்கு மேல் குறைந்துள்ளது. ஆனால் பலரும் வீட்டில் இருப்பதாலும், பல தனியார் நிறுவனங்களில் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றும்படி கூறியுள்ள காரணத்தினாலும், வீட்டு மின்நுகர்வு உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் வீட்டு மின்நுகர்வு மட்டும் 3,500 மெகாவாட்டுக்கு மேல் இருந்தது. தற்போது இது 4,500 மெகாவாட்டிற்கு மேல் உயர்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட பிரிவில் மட்டும் ஆயிரம் மெகாவாட்டிற்கு மேல் உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த மின்நுகர்வு உயர்ந்தால் மட்டுமே சமாளிப்பத்தற்கு பல்வேறு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டு மின்நுகர்வு உயர்ந்திருப்பதை எளிதாக சமாளித்து வருகிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: