×

நாடு முழுவதும் ஏப்.14 வரை அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 25ம் தேதி முதல் ஏப்.14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கை மேலும் நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது.  சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 201 நாடுகளில் பரவி 34 ஆயிரம் பேரை பலி கொண்டுள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நன்கு வளர்ச்சியடைந்த நாடான அமெரிக்காவில் கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு பலி எண்ணிக்கை 2,500யை நெருங்கிவிட்டது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்ைத நெருங்கிவிட்டது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களால், இந்தியாவிலும் கொரோனா பரவி 1,071 பேரை பாதித்துள்ளது. இதுவரை 29 பேர் பலியாகியுள்ளர்.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய அரசு களம் இறங்கியது. கடந்த 22ம் தேதி மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அன்றைய தினம் மக்கள் மிகுந்த ஒழுக்கத்துடன் ஊரடங்கை கடைப்பித்தனர். அடுத்த 2 நாளில் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணக்கை 500 ஆகவும் உயர்ந்தது.  இதனால் கடந்த 24ம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி மீண்டும் நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது மக்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் இருப்பது ஒன்றுதான் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஒரே வழி என்பதை வலியுறுத்தினார். அதனால் மார்ச் 25ம் தேதி முதல் ஏப்.14ம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். பஸ், ரயில், விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர பிற நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்கி குவித்தனர். நாடு முழுவதும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடை பயணமாக வெளியேறியது பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. சமூக விலகல் பற்றி கவலைப்படாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறியது கொரோனா பரவும் அபாயத்தை அதிகப்படுத்தியது. வெளிமாநில மக்கள் வெளியேற விடவேண்டாம், உணவு உட்பட அனைத்து வசதிகளும் இருந்த இடத்திலேயே வழங்கப்படும் என அறிவித்தும் மக்கள் சொந்த மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.

இந்நிலையில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று வேகமாக பரவுவதால், ஏப்.14ம் தேதிக்கும் பின்பும் ஊரடங்கை மத்திய அரசு நீட்டிக்கும் என்ற வதந்தி மக்களிடையே வேகமாக பரவியது. இந்நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா கூறியதாவது: நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று வெளியான செய்தி தவறு. ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. இதுபோன்ற அறிக்கைகள், செய்திகள், வதந்திகளை பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். ஊரடங்கு என்பது ஒரு பேரழிவு அல்லது தொற்றுநோய்களின் போது அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் ஒருவர் மருந்து மற்றும் உணவு தானியங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதிக்கப்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து பத்திரிகை தகவல் அமைப்பு(பிஐபி) டிவிட்டரில் விடுத்த தகவலில், ‘‘முடக்க காலத்தை அரசு நீடிக்கும் என வதந்திகள் பரவுகின்றன. இது ஆதாரபூர்வமற்றது என அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா மறுத்துள்ளார். 21 நாள் முடக்கம் பொருளாதாரம் மற்றும் சமூக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், இந்த முடக்கத்தை நீடிப்பதற்கான உடனடி திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை’’ என தெரிவித்துள்ளது.

பிரதமர் நிவாரணநிதிக்கு போலி ஐடி உருவாக்கிய கும்பல்
கொரோனா  நிவாரண நிதிக்கு பொதுமக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று  பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தநிலையில் நிதி வசூலிக்க  பிரதமர் அலுவலகம் சார்பில் தனியாக ஐடி உருவாக்கப்பட்டு இருந்தது.  pmcares@sbi என்ற அந்த ஐடி மூலம் நாடு முழுவதும் உள்ளவர்கள் பிரதமர்  நிவாரணத்திற்கு நிதி அளிக்கலாம். ஆனால் மர்ம கும்பல் இதை பயன்படுத்தி மோசடி  செய்வதற்கு தனியாக ஐடி உருவாக்கி உள்ளனர். அதன்படி pmcare@sbi என்ற புதிய  ஐடியை உருவாக்கி உள்ளனர். அதாவது உண்மையான ஐடி.யில் இருந்து ‘எஸ்’ என்ற எழுத்தை மட்டும் நீக்கி போலியை உருவாக்கி உள்ளனர். இதை டெல்லி சைபர் கிரைம் போலீசார்  கண்டுபிடித்து, கும்பல் பற்றி விசாரித்து வருகிறார்கள்.

அவசர நிலை பிரகடனம்? ராணுவம் மறுப்பு
கொரோனா வைரசை கட்டுப்படுத்த அவசர நிலை பிரகடனத்தை (எமர்ஜென்சி)  மத்திய அரசு அமல்படுத்த உள்ளது என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி  வருகின்றன. இதை ராணுவம் மறுத்துள்ளது. இது தொடர்பாக ராணுவத்தின்  அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதிவில், `‘ஏப்ரல் மாத மத்தியில் எமர்ஜென்சி  அமல்படுத்தப்படும் என சமூக வலைதளங்களில் புரளி பரவி வருகிறது. இதை  அமல்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு ராணுவம், தேசிய மாணவர் படை  மற்றும் என்எஸ்எஸ் மாணவர்கள் உதவுவார்கள் என்ற தகவலும் பரவி வருகிறது. இது  முற்றிலும் போலியான செய்தி. இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம்’’’ என  குறிப்பிட்டுள்ளது.

Tags : Announcement ,Government ,country , Central government, curfew, coronavirus
× RELATED ஊரடங்கை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி