×

21 நாட்கள் ஊரடங்கு காலகட்டத்தில் பெட்ரோல், சமையல் காஸ் தட்டுப்பாடு வராது: இந்திய எண்ணெய் கழக தலைவர் பேட்டி

புதுடெல்லி: பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் போதுமான இருப்பு உள்ளதால் ஊரடங்கு காலத்தில்  தட்டுப்பாடு ஏற்படாது என்று இந்திய எண்ணெய் கழக தலைவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல், மற்றும் விமான பெட்ரோல் விற்பனையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய எண்ணெய் கழக தலைவர் சஞ்சீவ் சிங்கின் தந்தை, 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்த நாளில் இறந்தார். அந்த நாளிலும் கூட எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சென்றடைகிறதா? என்பதை இந்திய எண்ணெய் கழக தலைவர் சஞ்சிவ் சிங் மேற்பார்வையிட்டு வருகிறார்.

இந்நிலையில், நாட்டின் எரிபொருள் நிலைமை குறித்துசஞ்சீவ் சிங் கூறியதாவது: மார்ச் மாதம் பெட்ரோல் தேவை 8 சதவீதமாகவும், டீசல் தேவை 16 சதவீதமாகவும் சரிந்துள்ளன. விமான பெட்ரோல் தேவை 20 சதவீதமாக சரிந்தது. தேவை சரிந்துள்ளதால் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இயங்குவதும் 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சமையல் காஸ் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிலிண்டர் நிரப்புவதற்கான (ரீபில்) தேவை 200 மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனா பீதியால் மக்கள் முதல் சிலிண்டர் காலியாகும் முன்பே அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்து விடுகின்றனர். அவர்களின் பதிவை தொடர்ந்து, சிலிண்டர் வினியோகிக்க ஊழியர்கள் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு சென்றால், அவர்கள் சிலிண்டர் காலியாகவில்லை என்கின்றனர்.

இதனால், சிலிண்டர் வினியோகிக்காமலேயே ஊழியர்கள் திரும்பி விடுகிறார்கள். எனவே, மக்கள் பீதியடைவதற்கு எதுவுமே இல்லை. எங்களிடம் தேவையான அளவு சிலிண்டர் இருப்பு உள்ளது. மக்கள் பீதியடைந்து பதிவு செய்தால் இந்த திட்டத்தில் தேவையில்லாத ஒரு குழப்பத்தை ஏற்படுத்திவிடும். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் ஆகியவை ஏப்ரல் மாதமும், அதற்கு மேலும் தேவையான அளவுக்கு இருப்பு வைத்துள்ளோம். பெட்ரோல் பங்க்குகள், காஸ் வினியோகம் அனைத்தும் வழக்கம்போல இயங்குகின்றன. கூடுதலாக எரிபொருள் தேவைப்பட்டாலும், அதற்கு ஏற்ப உற்பத்தி செய்வதற்கு சுத்திகரிப்பு ஆலைகளும் தயாராக உள்ளன. எனவே ஊரடங்கு காலத்தில் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : curfew ,President ,Indian Oil Corporation , Curfew, petrol, cooking gas, Indian Oil Corporation chairman
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...