தமிழகத்தில் 144 தடையை மீறியதாக 19,637 பேர் மீது வழக்குப்பதிவு; 22,936 பேர் கைது: டிஜிபி அலுவலகம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 144 தடையை மீறியதாக 22,936 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தமிழகத்திலும் 67 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்  மாவட்ட வாரியாக  எல்லைகளை மூடி போலீசார் சீல் வைத்துள்ளனர். 5 பேருக்கு மேல் யாரும் ஒன்று கூடக்கூடாது என்று எச்சரித்துள்ளனர். கொரோனா வேகமாக பரவி  உயிர் பலிகளாக மாறிவிடக் கூடாது என்ற அச்சம்தான் காரணம்.

ஆனால் மக்களிடம் கொரோனா குறித்த எந்த பதற்றமும் இன்றி தங்களது அன்றாட  பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்த பிறகு அடிக்கடி சாலைகளில் சுற்றி வந்ததாக இதுவரை 19637 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் 144 தடையை மீறியதாக இதுவரை 19,637 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 22,936 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5,25,000 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

Related Stories: