புதிய கணக்கின் வெளிப்படைத்தன்மை சந்தேகமே?: கொரோனா நிவாரணம் பெற PM CARES என்ற புதிய கணக்கை தொடங்கியது ஏன்?...காங்கிரஸ் கேள்வி

டெல்லி: இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். 1129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கடந்த 28-ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், கொரோனா  வைரசுக்கு எதிரான இந்தியாவின் போருக்கு நன்கொடை வழங்க அனைத்து தரப்பு மக்களும் விருப்பம் தெரிவித்தனர். அந்த உணர்வை மதிக்கும் வகையில், குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த  PM-CARES நிதியத்திற்கு பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்த நிதி தற்போதைய துன்பகரமான சூழலை சமாளிக்கவும், எதிர்காலத்தில் இதே போன்ற ஆபத்துகளை சமாளிக்கவும் உதவும்,’  என கூறியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தை  தணிக்க, கூட்டு நடவடிக்கை தேவைப்படுகிறது. இதுபோன்ற அவசர கால மற்றும் துயர சூழ்நிலையை  கையாள ஓர் தேசிய நிதியம் இருப்பது அவசியம் என்பதை கருத்தில் கொண்டு ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலை நிவாரணம்’ (PM-CARES) என்ற நிதி தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி வழங்க  விரும்புவோர் www.pmindia.gov.in என்ற இணையதளத்தில் சென்று, தங்களின் பங்களிப்பை கிரெடிட், டெபிட் கார்டு, யுபிஐ, நெட் பேங்கிங் மற்றும் ஆர்டிஜிஎஸ் அல்லது என்இஎப்டி மூலமாக செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி நன்கொடை வழங்க கோரி டுவிட்டரில் பதிவிட்ட, சில நிமிடங்களில், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், PM-CARES   நிதியத்திற்கு பணம் செலுத்திய வண்ணம் உள்ளனர். இந்நிலையில், நிவாரணம் பெற பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய புதிய கணக்கு குறித்து காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நிவாரணம் பெற பிரதமர் நரேந்திர மோடி புதிய கணக்கை தொடங்கியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். PMNRF  என்ற பழைய கணக்கை பயன்படுத்தாமல் PM CARES என்ற கணக்கை தொடங்கியது ஏன்? PMNRF என்ற பெயரை PM CARES என மாற்றி இருக்கலாம்; புதிய கணக்கு தொடங்கி இருக்க தேவையில்லை. PMNRF- இன் செலவு கணக்குகளில்  வெளிப்படைத்தன்மை இருக்கும்; புதிய கணக்கில் வெளிப்படைத்தன்மை சந்தேகமே என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>