கொரோனா பரவலை தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: உலகம் முழுவதும் 192 நாடுகளுக்கு மேலாக பரவி கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு 29 பேர் உயிரிழந்துள்ளனர். 1129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை  பொருத்தவரை 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையே, தமிழக அரசு மார்ச் 27-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், எதிர்பார்க்கப்படக்கூடிய, பெரும் எண்ணிக்கையிலான நோய்த் தொற்று இனங்களைத் திறம்படக் கையாள்வதற்கு, தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள்,  தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மையங்கள் ஏற்படுத்துதல், மருத்துவமனைக்கான படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள், கிருமி நாசினி சாதனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் போன்றவற்றை  வழங்குவதற்கு கணிசமான நிதி ஆதாரங்கள் தேவைப்படுகின்றது. மேலும், நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க ஏதுவாக, தனியார் மருத்துவமனைகளையும் கூட ஆயத்தப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

வேளாண்மை, கட்டுமானம் மற்றும் பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர் தினக்கூலி இழப்பினை சந்திக்கிறார்கள். ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிப்பதற்கு உதவி தேவைப்படுகிறது. மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் குடிமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள், கரோனா வைரஸ் தொற்றினை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான பணிகளைக் கருத்தில் கொண்டும், ஏழை, எளிய மக்கள்  எதிர்கொண்டுள்ள இப்பெரிய இன்னலில் இருந்து அவர்களை விடுவிக்கவும், தீவிரமான நோய்த் தடுப்புக்காகவும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு முதல்வர் பொது நிவாரண நிதிக்கு மனம் உவந்து தங்கள் பங்களிப்பினை  அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினர் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனாவை தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தடுப்பு, நிவாரண பணிகளுக்கு ஆன்லைனில் நிதி வழங்கப்படும்  என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கொரோனா காலத்திலும் தொய்வில்லாது தொண்டாற்றுவோம்!. மக்கள் செயலாளர்களாக செயல்பட மாவட்டச் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கொரோனா காலத்தில் திமுக  சட்டமன்ற/ நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் குடும்ப உறுப்பினர்களாக உதவிகள் செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அத்தியவாசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுவர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள திமுக இளைஞர்  அணி சார்பில் 93618 63559 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நிவாரணம் செலுத்தும் விவரம்:

* வங்கி பெயர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

* கிளை - தலைமைச் செயலகம், சென்னை – 600 009

* சேமிப்புக் கணக்கு எண் - 117201000000070

* IFSC Code – IOBA0001172

* CMPRF PAN – AAAGC0038F    

* SWIFT Code- IOBAINBB001.

* வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை / பற்று அட்டையின் மூலம் https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணையதளத்தில் செலுத்தி ரசீதினைப் பெற்றுக்கொள்ளலாம்.

* எலெக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (ECS) மூலமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம்.

தற்போதைய நிலையில், நேரிடையாக முதல்வரிடமோ, அரசு அலுவலர்களிடமோ நன்கொடை வழங்குவதை ஊக்குவிக்க இயலாது. எனினும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதியுதவி செய்யும் நபர்கள்/நிறுவனங்களின் பெயர்கள் பத்திரிகை செய்தியாக வெளியிடப்படும்.  பெறப்படும் அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய ரசீதுகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>