×

மருத்துவ பரிசோதனை, முகக்கவசம் இல்லை குடிநீர் வாரிய ஊழியர்களின் பாதுகாப்பில் அலட்சியம்: அதிகாரிகள் மெத்தனம்

பெரம்பூர்: கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் நபர்களும் தினந்தோறும் வேலை செய்து வருகின்றனர். அந்த வகையில் மளிகை  கடைகள், பால் விநியோகஸ்தர்கள், மெட்ரோ வாட்டர் ஊழியர்கள் என பலரும் தினமும் மக்களுக்காக பணியாற்றி வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும்  மெட்ரோ வாட்டர் ஊழியர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் தினமும் பணியாற்றி வருகின்றனர்.  குறிப்பிட்ட தண்ணீர் நிரப்பும் பகுதியிலிருந்து லாரிகளில் தண்ணீர் பிடித்துக்கொண்டு சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கும் வழங்கி வருகின்றனர். லாரி ஓட்டுநர், கிளீனர், சூபர்வைசர், டைம் கீப்பர் என தினமும் பலர்  இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

 இவர்களுக்கான கொரோனா தடுப்பு  உபகரணங்கள் எதுவும் சரிவர வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தினமும் மக்களை சந்தித்து குறிப்பிட்ட பகுதியில் தண்ணீரை கொண்டு சென்று சேர்க்கும் லாரி ஓட்டுநர்களும், கிளீனர்களும்  முகக்கவசம் அணிவது இல்லை. லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் தண்ணீரை இவர்கள் கொண்டு சென்று சேர்க்கின்றனர்.  இவர்களுக்கு  யாருக்காவது காய்ச்சல் அறிகுறி உள்ளதா என எந்தவித மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை.  இதுகுறித்து சென்னைகுடிநீர் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘‘தினந்தோறும் காலையில் டிரைவர் மற்றும் கிளீனர் வந்து தண்ணீரை லாரிகளில்  நிரப்பி பொதுமக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கின்றனர்.
தண்ணீரை நிரப்பும் போதும் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகின்றோம். இதில் யாருக்காவது சிறிய அளவில் கூட வைரஸ் தொற்று இருந்தால் அதன்மூலம் பொதுமக்களை பாதிக்கக்கூடும்.

எனவே ஒவ்வொரு தண்ணீர் நிரப்பும் இடங்களிலும் மருத்துவ  குழுவினரை அனுப்பி இங்கு வரும் ஊழியர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். மேலும் லாரி டிரைவர்கள் கிளீனர்கள் என அனைவருக்கும் முகக்கவசம் தர வேண்டும். இங்கு  பணிபுரியும் யாருக்காவது சிறிய அளவிலாவது காய்ச்சல் இருந்தால் அவர்களுக்கு விடுப்பு கொடுத்து வேறு ஊழியர்களை நியமிக்க வேண்டும்,’’ என்றனர்.  மக்களின் அத்தியாவசிய தேவையான தண்ணீரை தினமும் வழங்கி வரும் இந்த ஊழியர்களின் சேவை  முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே ஒவ்வொரு மண்டலத்திலும் மருத்துவ குழுவை அனுப்பி இவர்களுக்கு போதுமான முக கவசங்களையும் கையுறைகளையும் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : examination , Medical examination, no protection
× RELATED இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப...