தாய்லாந்தில் இருந்து டெல்லி வழியாக தமிழகம் வந்த 2 பேர் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை 14 பேருக்கு கொரோனா தொற்று!!

ஈரோடு : தாய்லாந்தில் இருந்து டெல்லி வழியாக தமிழகம் வந்த 2 பேர் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை 14 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. தாய்லாந்தைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழு, டெல்லியில் மாநாடு ஒன்றில் பங்கேற்ற பின்னர், ரயில் மூலம் சென்னை வந்துள்ளனர். இக்குழுவில் இருந்த 2 பேருக்கு கொரோனா உறுதியானதால் அவர்களுடன் ரயிலில் உடன்பயணித்தவர்கள் அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

தமிழ்நாட்டில் நேற்று  கொரோனா உறுதி செய்யப்பட்ட 8 பேருமே தாய்லாந்து நாட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தான். இதில் 4 பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நால்வரும் டெல்லி சென்றுவிட்டு திரும்பியவர்கள். இதனால் ஈரோட்டில் மற்றும் 1,750 குடும்பங்களைச் சேர்ந்த 5,400 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா உறுதி செய்யப்பட்ட 8 பேரில் எஞ்சிய 4 பேர் கோவைக்கு இடம் பெயர்ந்தவர்கள்.

இதில் பெண் மருத்துவரும் அவரது 10 மாத குழந்தையும் அடக்கம். பெண் மருத்துவர் ஈரோட்டில் பணிபுரிந்த போது, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவருக்கு சிகிச்சை அளித்ததை அவருக்கு கொரோனா பரவ காரணமாக அமைந்துவிட்டது. இவர் பணியாற்றிய ஈரோடு மற்றும் போத்தனூர் ரயில்வே மருத்துவமனைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. தாய்லாந்து  நாட்டவர்கள் பங்கேற்ற டெல்லி மாநாட்டில், தமிழகத்தில் ஈரோடு, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 1,500 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 819 பேரின் பட்டியலை அதிகாரிகள் கணக்கெடுத்துள்ளனர்.மற்றவர்கள் விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

Related Stories: