ஏப். 14-ம் தேதிக்குப்பின் நாட்டில் பின் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டமில்லை; மத்திய அமைச்சரவை செயலாளர் பேட்டி

டெல்லி: சீனாவில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் உருவாகிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 192 நாடுகளுக்கு மேலாக பரவி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை கொரோனா  தாக்குதலுக்கு 29 பேர் உயிரிழந்துள்ளனர். 1129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 116 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக, கடந்த 22ம் தேதி, நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி வலியுறுத்தினார். அன்றைய நாள், நாடு முழுவதும் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் மூடப்பட்டன. பஸ், ரயில் போக்குவரத்து  நிறுத்தப்பட்டது. ஆனால், வைரஸ் பரவுவது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 24-ம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டுக்கு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 22ம் தேதி நாடு முழுவதும்  கடைபிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு வெற்றி அடைந்ததற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பே காரணம். கொரோனா என்ற கொடூர வைரசை தடுக்க வேண்டுமென்றால் சமூகத்திலிருந்து விலகி இருப்பது மட்டுமே ஒரே சிறந்த வழியாகும்.

எனவே, சமூகத்திலிருந்து அனைவரும் விலகி இருப்பதை உறுதி செய்ய ஓர் முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். இந்த முடிவால் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்திக்கலாம். ஆனால், நாட்டு மக்களின்  உயிர்தான் முக்கியம். ஒவ்வொருவரின் உயிரும் முக்கியம். அதற்காக மார்ச் 24-ம் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அடுத்த 21 நாட்களுக்கு பொதுமக்கள் யாரும்  வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். அடுத்த 21 நாட்கள் நமக்கு மிக, மிக முக்கியமானது. இந்த 21 நாளில் நாம் கவனமாக இருக்காவிட்டால், 21 ஆண்டுகள் பின்தங்கி சென்று விடுவோம். பல குடும்பங்கள் நிர்கதியாகி விடும் என்றார்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜூவ் கெளபா, ஏப்ரல் 14-ம் தேதிக்கு பின் நாட்டில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று வெளியாகும் தகவல் ஆச்சரியத்தை அளிக்கிறது என்றார். இதன் மூலம் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: