×

வளர்ந்த நாடுகளை போன்ற முழு முடக்கம் : இந்தியாவுக்கு சரியாக வராது: பிரதமருக்கு ராகுல் கடிதம்

புதுடெல்லி: ‘வளர்ந்த நாடுகளில் அமல்படுத்துவது போன்ற முழு முடக்கம், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு சரியாக வராது,’ என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ராகுல் கூறியிருப்பதாவது: இந்தியாவில் அறிவிக்கப்பட்ட திடீர் முடக்கம், மக்கள் இடையே பீதியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தனிப்பட்ட சூழலை புரிந்து கொள்வது சிக்கலானது. வளரும் நாடுகளில் பின்பற்றப்படும் முழு முடக்கத்துக்கு பதில் வேறுவிதமான வழிகளை பின்பற்ற வேண்டும்.  இந்தியாவில் தினக்கூலியை சார்ந்து இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். கொரோனாவை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ஒட்டு மொத்த முடக்கத்தால், பொருளாதார நடவடிக்கைகள் முழுவதும் முடங்கியுள்ளன.

முடக்கத்தால் ஏற்படும் விளைவுகள், கொரோனா பலி உயர்வை அதிகரிக்கும். தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மூடப்பட்டதால், பல்லாயிரக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் மிக நீண்ட பயணம் மேற்கொண்டு தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்கின்றனர். இவர்களுக்கு வருமானமும் போய்விட்டது.  சத்தான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை இழந்துள்ளதால், இந்த வெளிமாநில தொழிலாளர்கள் எளிதில் நோய் பாதிப்புக்கும் ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு இருப்பிடம் அளித்து, அடுத்த சில மாதங்களை சமாளிக்க, அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்த வேண்டும்.

இவர்கள் சொந்த ஊருக்கு செல்வதால், இவர்களின் பெற்றோர்களும் நோய் பாதிக்கும் ஆளாகும் வாய்ப்புகள் அதிகம். இதனால், இது மிகப் பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தும். நமது மக்களின் சிக்கலான உண்மை நிலவரத்தை கருத்தில் கொண்டு, வித்தியாசமான அணுகுமுறையை பின்பற்றுவது பற்றி நாம் பரிசீலிக்க வேண்டும். வைரஸ் பாதிப்பிலிருந்து முதியவர்களை பாதுகாக்க நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவர்களை நெருங்கும் அபாயம் பற்றி இளைஞர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார். 


Tags : Rakul ,Countries , Developed Countries, Prime Minister, Rahul, Letter
× RELATED நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்...