கோட்டயத்தில் வெளிமாநிலத்தவர்கள் உணவு வழங்கக்கோரி போராட்டம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே பாய்ப்பாடு பகுதியில் ஆயிரக்கணக்கான அசாம், மேற்கு வங்காளம் உள்பட வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். லாக் டவுண் அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இவர்கள் வேலையில்லாமல் முடங்கி உள்ளனர். வெளிமாநில தொழிலாளர்களுக்கும் சமூக சமையலறை மூலம் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் பினராய் விஜயன் கூறியுள்ளார். ஆனால் பாய்ப்பாட்டில் உள்ள இந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Advertising
Advertising

இதையடுத்து நேற்று பாய்ப்பாடு சந்திப்பு தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து கோட்டயம் கலெக்டர் சுதீர்பாபு, பத்தனம் திட்டா மாவட்ட கலெக்டர் நூகு, எஸ்பி ெஜயதேவ் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். உணவு வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். அப்போது தங்களது ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டனர். இதையடுத்து உணவுத்துறை அமைச்சர் திலோத்தமன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து பெரும்பாலானோர் கலைந்து சென்றனர். எனினும் சிலர் சாலையிலேயே இருந்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.

மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு:

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா வெளியிட்டுள்ள அறிக்கை: கேரளாவில் இன்று (நேற்று) மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 8 ேபர் கண்ணூர் மாவட்டத்தையும், 7 பேர் காசர்கோடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். பாலக்காடு,மலப்புரம்,திருச்சூர்,திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது. 21 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (நேற்று) நோய் கண்டறியப்பட்டவர்களில் 18 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். மற்ற 2 பேருக்கும் அவர்கள் மூலம் பரவியுள்ளது. இதுவரை 1,41,211 பேர் வீடுகள், மருத்துவமனைகளில் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: