இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய டூர் நடக்குமா?

புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த 6 மாதங்களுக்கு ஆஸ்திரேலிய எல்லைகளை மூட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸி. டூர் நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியா சென்று முத்தரப்பு டி20 தொடர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட திட்டமிட்டுள்ளது. டெஸ்ட் தொடர் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியாக ஆஸ்திரேலியாவின் எல்லைகள் அனைத்தையும் 6 மாதங்களுக்கு மூட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் இந்திய அணியின் ஆஸி. டூர் கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் நடப்பதும், ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் உட்பட முக்கிய தொடர்கள் நடைபெறுவதும் சந்தேகம் என்ற இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது. வீரர்களின் விமானப் பயணத்துக்கான டிக்கெட், ஓட்டல்களில் அறைகளைப் பதிவு செய்தல் என எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்ய முடியாத நிலை எழுத்துள்ளது. டி20 உலக கோப்பை தள்ளிப் போனால், இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரையும் வேறு தேதிகளில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். ‘தற்போதைய நிலையில் உறுதியான முடிவு எதுவும் எடுக்க முடியாது. பொறுத்திருந்து பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’ என்று பிசிசிஐ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: