கொரோனா பாதிப்பு எதிரொலி 3 மாதங்களுக்கு கட்டண உயர்வு இல்லை: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவு

புதுடெல்லி: இன்னும் 3 மாதங்களுக்கு அழைப்பு மற்றும் இணைய கட்டணங்களை உயர்த்தப்போவதில்லை என, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் தவிக்கின்றன. ஏஜிஆர் கட்டண பாக்கியை கூட செலுத்த முடியவில்லை. தற்போது 4ஜி இன்டெர்நெட் பயன்பாட்டுக்கு சந்தாதாரர்கள் ஒரு ஜிபிக்கு சுமார் 3.5 செலுத்துகின்றனர். நஷ்டத்தை தவிர்க்க, கட்டண உயர்வை அறிவிக்க இருப்பதாக மொபைல் நிறுவனங்கள் தரப்பில் ஏற்கனவே கூறப்பட்டது. வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து குறைந்த பட்ச கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்தன.
Advertising
Advertising

இதில், இணையகட்டணமாக ஒரு ஜிபிக்கு 35 என நிர்ணயிக்குமாறு வோடபோன் ஐடியா நிறுவனம், குறைந்த பட்சம் 30 நிர்ணயிக்கலாம் என ஏர்டெல் நிறுவனம், ₹20 நிர்ணயிக்கலாம் என ஜியோ பரிந்துரை செய்தன. இதன்படி கட்டணம் உயர்த்தினால், தற்போது உள்ளதை விட 5 முதல் 10 மடங்கு அளவுக்கு கட்டணங்கள் உயர வாய்ப்புகள் உள்ளன.  இந்த சூழ்நிலையில், கொரோனா பாதிப்பு பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக, 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய சேவைக்காக இயங்கும் நிறுவனங்கள் தவிர, பெரும்பாலான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கின்றன.

தற்காலிக தொழிலாளர்கள் பலர் வேலை இழந்துள்ளனர். பல நிறுவனங்கள் சம்பள குறைப்பை அறிவித்துள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, கடன் தவணை இஎம்ஐகளை வங்கிகள் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.  இதை பின்பற்றி, கட்டண உயர்வை தற்காலிகமாக ஒத்தி வைக்க உள்ளதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சங்க டைரக்டர் ஜெனரல் ராஜன் மேத்யூஸ் கூறியதாவது:  தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடுமையான கடன் சுமையில் உள்ளன.

இந்திய வங்கிகளுக்கு இவை செலுத்த வேண்டிய கடன் பாக்கி 1.6 லட்சம் கோடி முதல் 2 லட்சம் கோடி வரை உள்ளது. எனவே, கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளது. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கட்டணத்தில் தற்போதைக்கு எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு கடன் தவணைகளை வசூலிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. இதே பரிந்துரையை நாங்களும் பின்பற்ற உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். எனவே, இன்னும் 3 மாதங்களுக்கு கட்டண உயர்வு இருக்காது. அதற்குள் முன்கூட்டியே ரீசார்ஜ் செய்பவர்கள், 3 மாதங்களுக்கு பிறகும் கட்டண உயர்வின் பாதிப்பை சில நாட்களுக்கு ஒத்திப்போட முடியும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Related Stories: