ஏழை தொழிலாளர்கள் மீது பழிபோடுவது சரியா? ஏ.பி.சூர்யபிரகாசம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

* வெளி மாநில, மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு முறையான ஏற்பாடு செய்யாமல் தற்போது, இவர்களால் தான் கொரோனா பரவ போகிறது என்று உழைக்கும் மக்கள் மீது அரசு பழி போடுவது ஜனநாயக நாட்டிற்கு அழகு கிடையாது.

Advertising
Advertising

கொரோனா வைரசின் வீரியத்தை இந்திய அரசு சரியாக புரிந்துகொள்ளவில்லை. பிப்ரவரி மாதம் முதல் சீனா கடுமையாக பாதிக்கப்பட்ட போதும், இந்தியா மார்ச் 15ம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை முறையாக பரிசோதனை செய்யவில்லை. இதன் விளைவாக தான், தற்போது இந்திய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு சரியான திட்டமிடுதலே செய்யவில்லை. பிரதமர் மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லை. திடீரென அவர்களே ஒரு முடிவை எடுத்து மாநில அரசுகள் மீது திணிக்கின்றனர். மாநில அரசோ இதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.

ஒரு நாள் ஊரடங்குக்கே மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் சென்னையில் உள்ள அடித்தட்டு தினக்கூலி தொழிலாளர்கள் பிரதமர் கேட்டுக்கொண்டதின்படி ஊரடங்கை கடைபிடித்தனர். ஆனால், பணக்காரர்களோ அதை மீறி மாலை கூட்டம் கூடி சிதைத்து விட்டனர். எனவே சாலையோரம் வசிக்கும் மக்கள், வெளி மாநில தொழிலாளிகள், மூத்த குடிமக்கள், குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள், கூலி தொழிலாளிக்கு உணவு, குடிநீர், தங்குமிடம் வழங்க மாநகராட்சிக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்தேன். இதற்கு மாநகராட்சி 2000 பேருக்கு தங்க வசதி செய்திருப்பதாக அறிக்கை அளித்தார். ஆனால், அதன் பிறகு அதனை பின்பற்றவில்லை. ரயில்களும் ரத்து செய்யப்பட்டதால் பிழைக்க வந்த வெளி மாநிலத்தவர்கள் நடு ரோட்டில் நிற்கவைக்கப்பட்ட துன்பபடுத்தப்பட்டனர். இது அரசின் மெத்தன போக்கை காட்டியது.

ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை. தெருவுல வராதிங்க என்று சொல்கிறார்கள். பண மதிப்பிழப்பு விவகாரத்தில் மக்களை தெருவில் நிற்க வைத்து கொடுமை செய்தனர். இப்போது இந்த விவகாரத்தில் வீட்டிற்குள்ளே வைத்து கொடுமை செய்கிறார்கள். வீடு இல்லாதவர்கள் தெருவுல இருப்பதால் போலீசார் அடிக்கின்றனர். சாலையோரம் வசிப்பவர்கள் கடைகளில் சாப்பிட்டு காலம் போக்கி வந்தனர். தற்போது அதுவுமில்லை.

வெளி மாநில, மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு ஏற்பாடு செய்யாமல், இவர்களால் தான் கொரோனா பரவ போகிறது என்று உழைக்கும் மக்கள் மீது பழி போடுவது ஜனநாயக நாட்டிற்கு அழகு  கிடையாது.

பிரதமர் வேதனை படுகிறேன் என்று கூறுகிறாரே தவிர. அவர்களை சாலை வழியாக நடந்து கூட செல்ல வேண்டாம் என்று கூறுகின்றனர். அவர்களுக்கு ரேசன் கார்டு எதுவும் கிடையாது. அவர்களுக்கு அரிசி, பருப்பு, உப்பு, எண்ணெய் போன்றவை எப்படி கொடுக்கப்போகிறார்கள் என்று ஒரு ஆலோசனையும் இல்லை. அத்தியாவசிய தேவைகளை வாங்க பணமே மக்களிடம் இல்லை. அரசு அறிவித்த பணமும் உதவாது. ஒரு குடும்பத்தில் உள்ள 5 பேருக்கு 1000 என்றால் 21 நாட்களுக்கு எப்படி உபயோகப்படும்.

அம்மா உணவகத்துக்கு செல்லலாம் என்று கூறியுள்ளனர். எங்கோ ஒரு இடத்தில் அம்மா உணவகம் உள்ளது.

அதில் கூட்டம் கூடாமல் எப்படி இருக்க முடியும்? பணக்காரர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து விடுவாங்க, ஆனால் தினக்கூலிகள் வாழ்வது மிகவும் கஷ்டம்; இந்தநேரத்தில் தான் அரசு மக்களுக்கு உதவ வேண்டும். வேலையில்லாமல் 4 நாட்கள் பொறுமை காத்த மக்கள், வேலைக்காக தற்போது வீதிகளில் இறங்கி நடக்க தொடங்கியுள்ளனர். வேலையுமில்லை, கூலியுமில்லை; எப்படி மக்கள் வாழ்வார்கள். இதனால் நகர்புறங்களில் வீட்டிற்குள் சும்மாவே இருக்க முடியாதவர்கள். சொந்தங்களுடன் சேர்ந்தால் போதும் என, சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்குகின்றனர். 21 நாட்கள் வயிற்றில் ஈரத்துணியுடன் வீட்டில் இருக்க அரசு நினைக்கிறதா என்று தெரியவில்லை. குடும்ப தலைவர்களுக்கு பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: