நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா மரணம்: நடிகர் சங்கம் இரங்கல்

சென்னை: பிரபல நாட்டுபுற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா (வயது 83), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.  கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பரவை முனியம்மா, சில நாட்களுக்கு முன் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில், கடுமையான  மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்ட அவரை நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டுக்கு கொண்டு வந்தனர். அங்கு 3 மணியளவில் உயிர் பிரிந்தது. அவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இவர்களில் செந்தில் குமார் என்ற மகன் மூளை  வளர்ச்சி குன்றியவர்.

Advertising
Advertising

விக்ரம் நடித்த தூள் படத்தில், ‘ஏ சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேரான்டி’ என்று கம்பீரமாக பாடி நடிகையாக அறிமுகமான பரவை முனியம்மா, தொடர்ந்து காதல் சடுகுடு, ஏய், சண்டை உள்பட   75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது கடைசி படம், மான் கராத்தே. நடிக்க வருவதற்கு முன் நாட்டுப்புற பாடல்கள் மூலம் பிரபலமான அவர், பல்வேறு டி.வி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். அவரது குடும்ப வறுமையை மனதில் கொண்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா 6 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்தார். தமிழக அரசு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்தது.

பரவை முனியம்மாவின் இறுதிச்சடங்கு நேற்று நடந்தது. கொரோனா வைரஸ் பரவலால் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அவரது இறுதிச்சடங்கில் உறவினர்கள் பெருமளவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அவரது மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Related Stories: