×

கொரோனா தாக்குதல் வேகம் எடுக்கிறது நாடு முழுவதும் 28 பேர் பலி: பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,000-த்தை தாண்டியது

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பினால் 28 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.  உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இதுவரை 6.66 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதன் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை  நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் 48 வெளிநாட்டினர் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,106 ஆக உயர்ந்துள்ளது.

இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 99 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரம், புதுச்சேரியில் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார்.  தமிழகத்தில் 6 வெளிநாட்டினர் உட்பட பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, 46 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 குணமடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மகாராஷ்டிராவில் 3 வெளிநாட்டினர் உள்பட 203 பேர், கேரளாவில் 8 வெளிநாட்டினர் உள்பட 202 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 7,  குஜராத்தில் 5, கர்நாடகாவில் 3, ஜம்மு காஷ்மீர், மத்திய பிரதேசம், டெல்லியில் தலா 2, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, பீகார், பஞ்சாப், மேற்கு வங்கம், இமாச்சலில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

தெலங்கானாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 வெளிநாட்டினரையும் சேர்த்து 67 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் 83 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதே போல், ராஜஸ்தானில் 2 வெளிநாட்டினர் உள்பட பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ள நிலையில், உத்தர பிரதேசம், குஜராத்தில் தலா ஒரு வெளிநாட்டினர் உள்பட முறையே 72, 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாபில் 38, அரியானாவில் 21, ஜம்மு காஷ்மீரில் 38, மேற்கு வங்கத்தில் 17, ஆந்திராவில் 19, லடாக்கில் 10, பீகாரில் 9, சண்டிகரில் 8, சட்டீஸ்கர் 7, உத்தரகாண்டில் 6, கோவா 5, இமாச்சல், ஒடிசாவில் தலா 3, அந்தமான் நிகோபர் தீவுகளில் 9, மிசோரம், மணிப்பூரில் தலா ஒருவர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 118 அரசு மருத்துவமனைகள், 16 தனியார் மருத்துவமனை ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதனிடையே, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு செயற்கை சுவாசக் கருவி தயாரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

குஜராத்தில் தவிக்கும் 300 தமிழர்கள்
குஜராத்தில் அகமதாபாத், காந்திநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களில் சிலர் குடும்பத்துடன் இட்லி சுட்டு வியாபாரம் செய்பவர்கள். இதுபோன்ற 300 தொழிலாளர்கள் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.

பட்டினியால்  இறந்து விடுவோம்
நாடு முழுவதுமான ஊரடங்கு உத்தரவினால், கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்களின் சொந்த ஊருக்கு நடந்தே செல்கின்றனர். இந்நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளி சாவித்திரி கூறுகையில், ``எங்களைத் தடுத்து நிறுத்தும் அரசு அதிகாரிகள், உணவு அளித்து பேருந்துகளில் மீண்டும் இருப்பிடத்துக்கே கொண்டு வந்து விடுகின்றனர். ஏதோ வைரஸ் என்று சொல்கிறார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு தாயாக, என் குழந்தைகளுக்கு சாப்பாடு கூட கொடுக்க முடியாமல் இருக்கிறேன். இங்கு எங்களுக்கு உதவ யாரும் இல்லை. இந்த நோய் தாக்கும் முன் பட்டினியால் நாங்கள் இறந்து விடுவோம்,’’ என்று புலம்பினார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரயில்வே மருத்துமவனையில் சிகிச்சை
கொரோனா பரவி வரும் சூழலில், மத்திய அரசு ஊழியர்களும்  ரயில்வே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், `ஓய்வு பெற்ற மற்றும் ரயில்வே துறை ஊழியர்களுக்கு மட்டுமே ரயில்வே மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது கொரோனா பரவி வருவதால், மத்திய அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களும் தங்களின் அடையாள அட்டையை காண்பித்து, நாடு முழுவதும் உள்ள ரயில்வேக்கு சொந்தமான 128 மருத்துவமனைகள், 586 மருந்தகங்களில் சிகிச்சை, மருந்து பெற்று கொள்ளலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.


Tags : attack ,Corona ,deaths , Corona, country, 28 killed
× RELATED கொரோனா தாக்கத்தால் இலங்கையில் தவித்த...