தயவு செய்து கெஞ்சி கேட்கிறேன்... யாரும் சொந்த ஊருக்கு போகாதீங்க...டெல்லி முதல்வர் உருக்கம்

புதுடெல்லி: ‘வேலை பார்ப்பதற்காக டெல்லி வந்த வெளிமாநில தொழிலாளர்கள், நாட்டு நலனுக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டாம்,’ என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உருக்கமாக வலியுறுத்தி உள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்றாட கூலி வேலைகளுக்காக உபி, அரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம் என்று பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி வந்துள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நடைபாதையாக குடும்பத்துடன் செல்ல ஆரம்பித்துள்ளனர். அவர்களை போலீசார் தடுப்பதால், எல்லையில் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

‘வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை விமானங்களை அனுப்பி அழைத்து வரும் மத்திய அரசு, சொந்த நாட்டில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யாதது ஏன்?’ என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா கடுமையாக மத்திய அரசை விமர்சித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து, உபி அரசு 1,000 பஸ்களை நேற்று முன்தினம் இயக்கியது. இதில் இடம் பிடிப்பதற்காக டெல்லி ஆனந்த் விகார் பஸ் நிலையத்தில் 3 கி.மீ. தூரம் வரையில் மக்கள் வரிசையில் காத்திருந்து ஏறினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுபோன்று பெருமளவில் மக்கள் கூட்டமாக சேர்வதால் வைரஸ் பரவல் அதிகரிக்கும் என்றும் நிபுணர்களின் எச்சரிக்கை வெளியானது.

இந்நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘உங்களுக்கு (வெளிமாநில தொழிலாளர்கள்) தேவையான உணவு, இருப்பிட வசதி ஆகியவை டெல்லி அரசால் செய்து தரப்படும் என்று நான் உறுதி அளிக்கிறேன். தற்போதைக்கு நாட்டு நலனுக்காக உங்கள் ஊர்களுக்கு செல்ல வேண்டாம். தற்போது எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள்.  ஏனெனில், அதிக அளவு கூடுவது, உங்களுக்கும் கொரோனா தொற்றை ஏற்படுத்தும். இதனால் உங்கள் கிராமங்களுக்கும்,  குடும்பங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். பிறகு நாடு முழுவதும் பரவும். இவ்வாறு நடந்தால், இந்த பெருந்தொற்றில் இருந்து நாட்டை காப்பது கடினம்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: