×

21 நாள் ஊரடங்கு கடுமையானதுதான் வேறு வழியில்லை ஒத்துழையுங்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் மன் கி பாத் மூலம் பொதுமக்களுக்கு உரையாற்றி வருகிறார். நேற்று அவர் தனது உரையில் கூறியதாவது: கொரோனா வைரசை கட்டுப்படுத்த 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது கடுமையான நடவடிக்கைதான். இது மக்களில் பெரும்பாலானோரை கஷ்டப்படுத்தியிருக்கும். குறிப்பாக ஏழை மக்களை இது பாதித்திருக்கும். இதற்காக சிலர் என் மீது கோபத்தில் இருப்பீர்கள்.  ஆனால், உயிர்க்கொல்லியான கொரோனா வைரசை வீழ்த்த இதுபோன்ற கடும் நடவடிக்கைகளால்தான் முடியும். அதற்காக நான் உங்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனாவை எதிர்த்து போராடுவது எளிதான காரியம் அல்ல. வளர்ந்த நாடுகளே பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதை பார்க்கிறோம். இந்திய மக்களை பாதுகாப்பாக வைப்பது முக்கியமானது. வேண்டுமென்றே ஊரடங்கு விதிகளை மக்கள் மீறவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும், சிலர் அப்படிதான் செய்கின்றனர். அவர்களுக்காக நான் ஒன்றை சொல்கிறேன். இந்த ஊரடங்கு விதிகளை கண்டிப்பாக பின்பற்றாவிட்டால் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து அவர்களை பாதுகாத்து கொள்வது மிகவும் கடினம். கொரோனா வைரசை எதிர்த்து ஏராளமான வீரர்கள் போரிட்டு வருகின்றனர்.

வீடுகளில் இருந்து மட்டுமல்ல வீடுகளுக்கு வெளியே இருந்தும் அந்த வீரர்கள் போரிடுகின்றனர். நமது மருத்துவர்கள், செவிலியர்கள்தான் இந்த யுத்தத்தில் முன்னணியில் இருக்கும் வீரர்கள். வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டவர்களில் சிலர் விதிகளை மீறுவதாக வெளிவரும் தகவல்கள் எனக்கு வருத்தம் அளிக்கிறது. சமூக விலகலை அதிகரியுங்கள். பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, கொரோனாவிலிருந்து மீண்டவர்களிடம் மோடி உரையாற்றினார். மேலும், அவர்களுக்கு தரமான சிகிச்சை அளித்த மருத்துவர்களை பாராட்டினார்.

Tags : Modi , 21 day curfew, PM Modi, Corona virus
× RELATED ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர்...