அமெரிக்காவில் கொரோனா பலி 2000-த்தை தாண்டியது நியூயார்க் உட்பட 3 முக்கிய நகரங்களை முடக்க திட்டம்: அதிபர் டிரம்ப்புக்கு ஆளுநர் எதிர்ப்பு

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதனால் நியூயார்க், நியூஜெர்சி, கனெக்டிக்கெட் ஆகிய 3 நகரங்களை தனிமைப்படுத்துவது பற்றி ஆலோசித்துக் கொண்டிருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நேற்று வரையில் 1 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 2010 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் பலி எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.  முக்கிய நகரமான நியூயார்க்கில் மட்டும் 728 பேர் பலியாகியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் இங்கு 222 பேர் பலியாயினர்.

 52 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 7 ஆயிரத்து 300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், நியூஜெர்சி, கனெக்டிகட் ஆகிய நகரங்களில் பாதிப்பு அதிகமாகியுள்ளது.  இதனால், இந்த 3 நகரங்களின் முக்கிய பகுதிகள் தனிமைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால், இந்த திட்டத்துக்கு நியூயார்க் ஆளுநர் ஆன்ட்ரு கூமோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

மக்களை தனிமைப்படுத்தினால், அது முடக்க நிலை போல் மாறிவிடும். நமது நகரங்கள் சீனாவின் வுகான் நகரம் போல் மாறிவிடும். இது சட்ட ரீதியானது என நான் நினைக்கவில்லை. இது அமெரிக்காவின் போர்க்கால நடவடிக்கை அறிவிப்பாக இருக்கும். மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.

இவ்வாறு ஆளுநர் ஆன்ட்ரு கூமோ தெரிவத்துள்ளார்.

மருத்துவ கல்லூரிகளில் விரைவில் பட்டமளிப்பு விழா:

கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், அமெரிக்காவில் டாக்டர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. அதனால், மருத்துவ கல்லூரிகள் இறுதியாண்டு மாணவர்களுக்கு விரைவில் பட்டமளிக்க ஏற்பாடுகள் நடக்கிறது. நியூயார்க் மருத்துவ கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பே பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடற்படை கப்பலில் சிகிச்சை

அமெரிக்காவின் வெர்ஜினியாவில் இருந்து அமெரிக்க கடற்படையின், ‘யுஎஸ்என்எஸ் கம்போர்ட்’ என்ற கப்பல் மருத்துவ குழுவினருடன் இன்று நியூயார்க் வருகிறது. இதில், ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன. நியூயார்க் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காத கொரோனா நோயாளிகளுக்கு கடற்படை கப்பலில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

அதிபர் வேட்பாளர் தேர்வு ஓட்டெடுப்பு ஒத்திவைப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பிரைமரி ஓட்டுப்பதிவு அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனாவால் ஓட்டெடுப்பை ஜூனுக்கு. நியூயார்க் ஆளுநர் ஆன்ட்ரு ஒத்திவைத்துள்ளார்.

Related Stories: