வெளியேறும் மக்களால் சீனாவுக்கு ஆபத்து

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட ஹூபெய் மாகாணத்தில் இருந்தும் ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர முயற்சிக்கின்றனர். இதனால், அங்கிருந்து வைரஸ் நாடு முழுக்க பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகானில் தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவியது. இந்த பேராபத்து தற்போது உலகம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. எனினும், ஹூபெய் மாகாணத்தில் தற்போது இந்த வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனாலும், வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்களுக்கு தொடர்ந்து வைரஸ் பாதிப்புகள் இருந்து வருகிறது.

பல்வேறு கட்டுப்பாடுகள் இங்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்நகரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. வாகனங்கள் இயங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹூபெய் மாகாணத்திற்கு வந்து வேலை பார்க்கும் பிற மாகாண மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். இதனால், அங்கு பல இடங்களில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த மாகாணத்தில் தடைகள் தளர்த்தப்பட்டாலும், அவர்கள் வெளி மாகாணங்களுக்கு செல்ல இன்னமும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது. போலீசாரின் அடக்கு முறையால் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ‘பல மாதங்களாக ஹூபெய் மாகாணத்தில் முடங்கிக் கிடந்த தங்களால் இனியும், இங்கேயே முடங்கிக் கிடக்க முடியாது. உடனடியாக மாகாண எல்லையை அரசு திறந்து விட வேண்டும்,’ என்று மக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

Related Stories: