வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்; பனை ஓலையில் ‘மாஸ்க்’ தயாரித்த ஏழை தொழிலாளர்கள்: கொரோனாவை விரட்ட புதிய யுக்தி

குளத்தூர்: ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற வகையில் கொரோனாவை விரட்ட பனை ஓலையில் மாஸ்க் தயாரித்து அணிந்து பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பனைத் தொழிலாளர்கள். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தனிமைப்படுத்துதலே ஒரே வழி என 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பல இடங்களில் பொதுமக்கள் அலட்சியமாக கூட்டம், கூட்டமாக வெளியே சென்று வருகின்றனர். மேலும் பலர் முகக்கவசம் இன்றியும் சுற்றித் திரிகின்றனர்.

Advertising
Advertising

முக கவசங்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு முக கவசம் ரூ.30, 40, 50 என இஷ்டம் போல் விலையேற்றத்தை சந்தித்துள்ளன. இந்த விலை ெகாடுத்து முக கவசம் வாங்குவது என்பது ஏழைகளுக்கு சாத்தியம் இல்லாத நிலையில் ஒரு சிலர் கைக் குட்டை, டவல் ஆகியவற்றை முகத்தில் கட்டிச் செல்வதை பார்க்க முடிகிறது. ஆனால் ஏழை கூலித் தொழிலாளர்கள் எங்கே போவது? எப்போதும் உடலில் சட்டை கூட இல்லாமல் பனையேறும் தொழிலாளர்கள் தங்களின் பனை ஓலையையே மாஸ்க் ஆக மாற்றி அணிந்து அசத்தியுள்ளனர்.

இதுகுறித்த விவரம் வருமாறு: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகேயுள்ள கு.சுப்பிரமணியபுரத்தில் பனைத் தொழில் செய்துவருபவர்கள் குணசேகரன், முருகலட்சுமி தம்பதியினர். பனைத் தொழில் என்பது ஒரு ஆண்டில் 4 முதல் 6 மாதங்கள் வரை தான் இருக்கும். பனையில் பாலை வந்து அதை பக்குவப்படுத்தி இடுக்கி சீவி விட்டால் தான் பதநீர் இறக்கி கருப்பட்டி தயாரிக்க முடியும். அந்த பாலையை ஒரு நாள் சீவாமல் விட்டாலும் காய்ந்து விடும், பதநீர் இறக்க முடியாது. தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தொழிலையும் கை விட முடியாத இவர்கள் துணி மாஸ்க்கை தேடாமல் பனை ஓலையில் முகக்கவசம் தயாரித்து, அதை அணிந்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து குணசேகரன் கூறுகையில், ‘‘அனைவரும் முககவசம் அணிந்து செல்கின்றனர். நாங்கள் முககவசங்களை தேடிச் செல்லவோ, அதை பணம் கொடுத்து வாங்கவோ வசதியில்லை. அதனால் எங்கள் பனை ஓலையையே முகக்கவசமாக அணிந்து ெசல்கிறோம். எனக்கும், எனது மனைவிக்கும் கடந்த ஒரு வாரமாக இது தான் முக கவசம் என்றனர்’’. இயற்கைக்கு உகந்த பனை ஓலை முக கவசமாக மாற்றிய இந்த ஏழை பனைத் தொழிலாளர்கள் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்.

Related Stories: