திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பசியுடன் தவிப்பவர்களுக்கு தினமும் 50 ஆயிரம் உணவு பாக்கெட்டுகள்

திருமலை: திருமலை, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருமலை அடுத்த தர்மகிரியில் உள்ள வெங்கடேஸ்வரா வேத பாடசாலையில் உலக நன்மைக்காக கடந்த 25ம் தேதி முதல் சீனிவாச சாந்தி மஹா தன்வந்திரி யாகம் நடந்து வந்தது. நேற்று பூரணாஹூதியுடன்  யாகம் நிறைவு பெற்றது. இதில் ஏழுமலையான் கோயில் தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் மற்றும் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் அனில்குமார் சிங்கால் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா வேகமாக பரவி வந்த நிலையில் ஏழுமலையான் கோயிலில் முதலில் பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

Advertising
Advertising

தொடர்ந்து அலிபிரி மலைப்பாதையில் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதன் தீவிரம் அதிகமாக இருப்பதை அடுத்து பிரதமர் மோடி மற்றும் மாநில அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டது. இருப்பினும் ஏழுமலையான் கோயில் மற்றும் தேவஸ்தானத்தின் இதர கோயில்களில் ஆகம முறைப்படி வழக்கம்போல் அர்ச்சகர்கள் பூஜைகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது உலகையே அச்சுறுத்தி வரக்கூடிய கொரோனாவிலிருந்து அனைவரும் உடல் ஆரோக்கியம் பெற்று இதன் பாதிப்பில் இருந்து வெளியே வரவேண்டும் என்பதற்காக ஆகம ஆலோசகர்கள் கூறிய ஆலோசனையின்படி ஸ்ரீசீனிவாச சாந்தி உற்சவ தன்வந்திரி யாகம் கடந்த 25ம் தேதி அங்குரார்ப்பணத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் நிறைவு பெற்றது. திருப்பதியில் பலர் உணவு கிடைக்காமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுக்காக நேற்று மதியம் மட்டும் 15 ஆயிரம் உணவு பாக்கெட்டுகள்,  இரவுக்கு 20 ஆயிரம் உணவு பாக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதேபோல 50 ஆயிரம் உணவு பாக்கெட்டுகள் வரை ஒவ்வொரு வேளையும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடந்த தன்வந்திரி யாகத்தின் மூலம் விரைவில் உலகில் உள்ள அனைவரும் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து வெளியேறி மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப ஏழுமலையான் அருள்புரிவார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: