×

வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிட வசதியை பணிபுரியும் நிறுவனங்களே ஏற்படுத்தித் தர வேண்டும்: முதல்வர் பழனிசாமி அறிக்கை

சென்னை: இதர மாநிலங்களை சார்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ வசதிகள் அனைத்தும் முன்பு வேலைபார்த்த நிறுவனங்களே தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தமிழக அரசு இதனை கட்டுப்படுத்துவதற்கு நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்தியது. இதனிடையே நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது;

* கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களில் நெருக்கடிகால மேலாண்மைக்குழு அமைக்க வேண்டும்.

* வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது.

* இதர மாநிலங்களை சார்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ வசதிகள் அனைத்தும் முன்பு வேலைபார்த்த நிறுவனங்களே தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டும். இதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* தற்போதுள்ள இருப்பிடம் நெருக்கடியாக இருப்பின் மாற்று தங்கும்வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

* வெளி மாநிலத்தை சார்ந்த தொழிலாளர்கள் அவர்கள் முன்பு பணியிலிருந்த இடங்களிலிருந்து வெளியேறி இதர நகரங்களுக்கோ ரயில் பயணம் மேற்கொள்ள ரயில் நிலையங்களுக்கோ வந்து வெளியில் இருந்தால், அவர்களை தற்காலிக முகாம்களில் தங்கவைத்து உணவு, மருத்துவவசதி செய்து தருமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* வெளி மாநில தொழிலாளர்களின் தேவையறிந்து, தங்குமிடங்களில் வசதிகளை மேம்படுத்திட, வெளி மாநிலத்தை சார்ந்த அமைப்புகளின் தலைவர்களோடு ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

* பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில் சம்பள பட்டியல் தயாரிக்க 3 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் 2 அல்லது 3 ஊழியர்களுக்கு மார்ச் 30, 31, ஏப்ரல் 1-ல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் மூலம் சிறப்பு அனுமதி தரப்படும்.

* வரும் 2 மாதங்களில் பிரசவிக்க உள்ள சுமார் 1.5 லட்சம் தாய்மார்கள் கண்டறியப்பட்டுள்ளனர். கர்ப்பிணிகளின் உடல்நிலை குறித்து தனி கவனம் செலுத்துமாறு மருத்துவ அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* காய்கறி, இறைச்சி, மீன் அங்காடிகளில் சமூக விலகல் கடைபிடித்தலை செயல்படுத்த ஆட்சியர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* தீவிர சுவாசக்கோளாறுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரை கண்காணிக்க வேண்டும். தீவிர சுவாசக்கோளாறு உள்ளவர்கள் பற்றி சுகாதாரத்துறைக்கு தனியார்மருத்துவமனை தகவல் தெரிவிக்கவேண்டும்.

* பல்வேறு பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்டு 9 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Tags : facilities ,accommodation facilities ,Palanisamy , Outsourcing workers, food, accommodation, chief minister Palanisamy
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...