வறுமை கொடுமையுடன் கொரோனா கொடுமையும் சேர்ந்தது ஊரடங்கு அறிவிப்பில் பசியடங்க வழி என்ன?

* ஆகாரத்திற்கு வழி தேடி பரிதவிக்கும் ஆதரவற்றோர்

* அரசு வழங்குவது முழுமையில்லை என வேதனை
Advertising
Advertising

மதுரை: கொரோனா ஊரடங்கு உத்தரவால் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பிளாட்பார வாசிகள், ஆதரவற்றோர் நிலைமை பரிதாபகரமாக மாறியுள்ளது. உணவு கிடைக்காமல் இருக்கும் இவர்களின் பசியை அரசு அதிகாரிகள் போக்கி வரும் நிலையிலும், இது முழுமையாக அனைவருக்கும் சென்றடையவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. வைரஸ் பரவுதலை முற்றிலுமாக தடுப்பதற்கு பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மார்ச் 24 மாலை 6 மணி முதல் 21 நாட்கள் (ஏப். 14 வரை) குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144ன் கீழ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருந்து, காய்கறி, இறைச்சி கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்த போதும், இது பொதுமக்களுக்கு ஓரளவு பலனிளித்தும், தெருவோர ஆதரவற்ற ஏழைகள் உணவு கிடைக்காமல் பசியில் வாடி வருகின்றனர். இதனால் இவர்களின் பசியை ஊரடங்கு உத்தரவு முடியும் வரை போக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி ஆகிய 6 மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான தெருவோர ஆதரவற்ற ஏழைகள் இருக்கின்றனர். ஓட்டல்கள் மட்டுமல்லாது கோயில்கள், மசூதிகள், சர்ச்கள் என ஆலயங்கள் பூட்டப்பட்டதும், பொதுமக்கள் நடமாட்டம் தடுக்கப்பட்டதும் இவர்கள் தங்களது உணவு தேவையை தீர்த்து கொள்ள முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தெருவோர ஆதரவற்றவர்களை சமுதாய கூடங்களில் தங்க வைத்து உணவு பரிமாறிட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், கொரோனா பாதிப்பு எதிரொலியாக அதிகாரிகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு பணிகளை கவனிக்கும் நிலையில், இந்த தெருவோர ஆதரவற்றவர்கள் மீதான அதிகாரிகளின் ‘கரிசனம்’ குறைந்திருப்பதே உண்மை. ஆங்காங்கே தங்கள் பகுதியில் ஆதரவற்று தவிப்போருக்கு உணவுப்பொட்டலம், தண்ணீர் பாட்டில் வழங்கி கொண்டிருந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதி கிடைக்குமா?

இதுகுறித்து தன்னார்வ தொண்டு அமைப்பினர் கூறுகையில், ‘‘தொண்டு அமைப்பினர் வழங்கும் உணவுக்காக ஆதரவற்றோர் கூடுவதால் கொரோனா பரவும் ஆபத்திருப்பதாக கருதி அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையால் சேவை வழங்க விரும்பும் தொண்டு அமைப்பினர் உணவு தயாரிப்பிற்கான பொருட்களை அதிகாரிகளிடம் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் உள்ள சிறிய அளவிலான மக்களின் உணவுத்தேவையை அவ்வப்போது தன்னார்வலர்களும், தொண்டு அமைப்பினரும் நிறைவேற்றிடலாம். சிறு துளி வெள்ளமாக, பலர் பல்வேறு குழுக்களாக இந்த சேவையை வழங்கிடலாம். அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுடன், போலீசும் இணைந்து ஆதரவற்றோருக்கென உணவு பரிமாறுதல் நடத்தினாலும் அது முழுமை அடையவில்லை. ரோட்டோரத்திலும், ஆதரவற்றும் இருப்பவர்கள் ஆங்காங்கே பசியால் வாடி வருவதே உண்மை. எனவே ஆங்காங்கே உள்ள சமூக, தொண்டு அமைப்பினருக்கு உரிய அனுமதி அட்டை வழங்கினால், அவர்களே உணவு சமைத்து ஆதரவற்ற பலருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கிட முடியும். இதற்கான அனுமதியை அந்தந்த மாவட்ட, உள்ளாட்சி, போலீஸ் நிர்வாகங்கள் வழங்கிட வேண்டும்’’ என்றனர்.

மூன்றுவேளையும் உணவு: இதுகுறித்து மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகனிடம் கேட்டபோது, ‘‘மதுரை மாநகராட்சியை பொறுத்தவரை 100 வார்டுகளில் தெருவோர ஆதரவற்ற ஏழைகள் கணக்கிடப்பட்டு, 4 மண்டல பகுதிகளிலும் 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். பூங்கா முருகன் கோயில் மண்டபப்பகுதி சமுதாய சமையல் கூடம் மூலம் 600 பேருக்கும், ஆரப்பாளையம், சுப்பிரமணியபுரம் பகுதிகளில் சமுதாய சமையல் கூடங்கள் மூலம் தலா 200 பேருக்கும் என ஆயிரம் பேருக்கு உணவு தயாராகிறது. நகர்ப்புற வீடற்ற ஏழைகள் தங்கும் இல்லங்கள் உத்தங்குடி, கோ.புதூர் உள்ளிட்ட 11 இடங்களில் உள்ளன. இங்கு அந்தந்த இல்லங்களிலேயே உணவு தயாரிக்கப்பட்டு 3 வேளையும் வழங்கப்படுகிறது. மேலும் மாநகராட்சியின் சார்பில் 12 இடங்களில் அம்மா உணவகங்கள் மூலமாகவும், மூன்று வேளை உணவு தயாரித்து வழங்கி வருகிறோம்’’ என்றார்.

யானைப்பசிக்கு...

இதுபோல, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களிலும் மாவட்ட, உள்ளாட்சி நிர்வாகங்களால் தெருவோர ஆதரவற்றவர்களுக்கு தற்காலிக சமையல் கூடங்கள் அமைத்து, உணவு தயாரித்து பரிமாறப்பட்டு வருகிறது. ஆனால், இந்த விநியோகம் என்பது ஆட்கள் பற்றாக்குறை, பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முழுமை பெறவில்லை. அனைத்து மாவட்டங்களிலுமே இந்த முயற்சிகள் அனைத்தும், ‘யானைப்பசிக்கு சோளப்பொறி’ கதையாகவே இருக்கிறது.

பரிதவிப்பில் பல்லாயிரம் பேர்...

மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அதிகளவிலான ஆதரவற்றோரை கொண்ட பகுதியாக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்கள் உள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோயில், ரயில்நிலைய பகுதிகள், காந்திமியூசியம் ரோடு உள்ளிட்ட இடங்களில் மட்டுமே ஆயிரக்கணக்கான ஆதரவற்றோர் உள்ளனர். இதேபோல்தான் பழநி முருகன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பகுதிகளிலும் ஆதரவற்றோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கிறது. தவிர, வடமாநிலத்திலிருந்து வந்து நாடோடிகளாக வாழ்வோரில் பலரும் ஆதரவற்ற நிலையிலேயே ரோட்டோரத்தில் வசித்து வருகின்றனர். இவர்களை எல்லாம் கணக்கெடுத்தால் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர் எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டுகிறது.

Related Stories: