×

தமிழகத்தில் மேலும் 2 பேர் குணமடைந்தனர்; இதுவரை கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு: அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 2 பேர் குணமடைந்தனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தமிழக அரசு இதனை கட்டுப்படுத்துவதற்கு நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்தியது. இதனிடையே நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உள்ளது.

மேலும் பலருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் சிறப்பு வார்டுகள் அமைப்பது குறித்து தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 2 பேர் குணமடைந்தனர். சென்னையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர், ஏற்கனவே குணமடைந்து வீட்டுக்குச் சென்று விட்டனர். இந்நிலையில் மேலும் 2 பேர் குணமடைந்து, வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டனர் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள டிவிட்டரில் பதிவில்; அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 2 பேரும் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்; எனினும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர் என குறிப்பிட்டார். மேலும் நாடு முழுவதும் இதுவரை 35,000 பேருக்கு கொரோனா நோய்க்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 113 பரிசோதனை நிலையங்களில் கொரோனா நோய் கண்டறியும் சோதனை நடைபெறுகிறது. தனியாருக்கு சொந்தமான மேலும் 47 பரிசோதனை நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று இரவே தினகரன் நாளிதழில் இது தொடர்பான தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Tags : Vijayabaskar Dwight ,Corona ,Tamil Nadu , Tamil Nadu, 2 Healed, Corona, Minister Vijayabaskar Dwight
× RELATED கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை...