கொரோனா பரவலை தடுக்க வினோத முயற்சி: அடிப்படை வசதியுடன் மரத்தில் வீடு கட்டி இளைஞர்களை தனிமைப்படுத்திய மேற்குவங்க கிராம மக்கள்

பாங்டி: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,இந்தியாவில் தற்போது வரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 979 ஆக உள்ளது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டில் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் பாங்டி  கிராமத்தில் சென்னையில் இருந்து திரும்பிய 7 இளைஞர்களை அக்கிராம மக்கள் வித்தியாசமான முறையில் தனிமைப்படுத்தியுள்ளனர்.

ஊருக்கு வெளியே உள்ள மா மரத்தின் கிளைகளில் அவர்களுக்கு படுக்கும் விதமாக மூங்கில் குச்சிகள் மூலம் 7 கட்டில்கள் செய்துள்ளனர். அவை அனைத்தும் பிளாஸ்டிக் ஷீட்டுகள் கொண்டு மூடப்பட்டுள்ளன. மேலும், கொசு உள்ளிட்ட  பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க அனைத்திலும் கொசுவலை பின்னப்பட்டுள்ளது. மேலும் மொபைல் போன்களை சார்ஜ் செய்ய பிளக் பாயிண்ட் பொருத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட 7 பேருக்கும் மஸ்குகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்,  அவர்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் சாப்பாடு எடுக்க மட்டும் மரத்தில் இருந்து கீழ வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 7 பேரும் சென்னையில் வேலை செய்பவர்கள் என்றும் கொரோனா தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வந்த போது சொந்த ஊர் திரும்பினார்கள். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர் 7 பேரும் தனிமையில் இருப்பது  நல்லது என்று கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் மரத்தில் இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளனர்.

7 பேரில் ஒருத்தரான 24 வயது மதிக்கத்தக்க பிஜோய் சிங் லயா கூறுகையில், எங்கள் பெரும்பாலான நேரத்தை மரத்திலேயே செலவிடுகிறோம். கழிப்பறையைப் பயன்படுத்தவும், துணிகளைக் துவைக்கவும், உணவு சாப்பிடும் போது மட்டுமே  நாங்கள் மரத்தில் இருந்து கீழே இறங்குகிறோம். நாங்கள் முழுமையான தனிமையில் இருப்பதால் கிராமத்தில் யாருக்கும் ஆபத்து ஏற்படாதவாறு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமவாசிகள் என்ன செய்யச் சொன்னார்களோ அதை நாங்கள்  பின்பற்றுகிறோம் என்று கூறினார்.லயாவின் கூற்றுப்படி, அவர்கள் அனைவரும் சென்னையில் ஒரு மெக்கானிக் கடையில் வேலை செய்துள்ளனர். அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயில் மூலம் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள காரக்பூர்  ரயில் நிலையம் வந்துள்ளனர். அங்கிருந்து புருலியாவுக்கு பஸ் மூலமும் பின்னர் அங்கிருந்து, பலராம்பூருக்கு ஒரு வாகனத்திலும் சென்றுள்ளனர்.

7 பேரும் 22 வயது முதல் 24வயதுடையவர்கள் அவர்கள் அனைவரும் கிராமத்தில் நுழைய முயன்ற போது மக்கள் போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர்.  தொடர்ந்து, போலீசார் உதவியுடன் 7 பேரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 7பேரும் 14நாட்கள் தனிமையில்  இருப்பது நல்லது என மருத்துவர்கள் ஆலோசனை கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து,  கிரமத்திற்கு சென்ற இளைஞர்களை தடுத்த கிராம மக்கள் உங்களுக்கு தேவையான அனைத்தும் மரத்தில் செய்யப்பட்டுள்ளது. உடல்நலத்தில் விளையாட நாங்கள் விரும்பவில்லை ஆகவே 7 பேரும் மரத்திலே இருக்க  சொல்லி கிராம மக்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர்களும் அதையேற்று மரத்திலே இருப்பதாக தெரிவித்துள்ளனர். கிராம மக்களின் இந்த முயற்சிக்கு 7பேரின் குடும்பத்தாரும் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Related Stories: