கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கை சிறைக்கைதிகள் 12 ஆயிரம் பேருக்கு மாஸ்க்: இரவு பகலாக தயாரித்து வழங்கப்பட்டது

சேலம்: கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள சிறை கைதிகள் அனைவருக்கும் மாஸ்க் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் தமிழக சிறைகளில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 2642 விசாரணை கைதிகளுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நன்னடத்தை கைதிகள் சுமார் 1200 பேருக்கு பரோல் வழங்கவும் அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் சிறையில் இருக்கும் கைதிகள் அனைவருக்கும் மாஸ்க் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடனடியாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாஸ்க் கிடைக்காத நிலையில் கைதிகளை வைத்து மாஸ்க் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கோவை, புழல், திருச்சி, கடலூர் உள்பட அனைத்து மத்திய சிறைகளிலும் மாஸ்க் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. சேலம் சிறையில் டைலர் கைதிகள் இல்லாததால் அங்கிருந்த தையல் மிஷின் கோவை மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கைதிகள் இரவு பகலாக மாஸ்க் தயாரித்தனர். இதையடுத்து அங்கு தயாரிக்கப்பட்ட 1300 மாஸ்க் நேற்று சேலம் மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவை, சிறையில் உள்ள 800 கைதிகளுக்கு வழங்கப்பட்டது. இதேபோல மற்ற சிறைகளில் உள்ள கைதிகளுக்கும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சிறையில் இருக்கும் சுமார் 12ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அனைவருக்கும் நேற்று மாஸ்க் வழங்கப்பட்டது. இதனை அவர்கள் அவ்வப்போது நன்றாக தண்ணீரில் அலசி மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போல தினமும் தயாரிக்கப்படும் மாஸ்க்குகள் அரசு மருத்துவமனைகள், எஸ்.பி., கமிஷனர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்து வருகிறோம்’’ என்றனர்.

Related Stories: