கர்நாடகாவில் இருந்து வந்த மீனவர்கள் தங்குவதை எதிர்த்து கமுதி கிராம மக்கள் மறியல்: வேறு இடத்துக்கு பஸ்களில் அழைத்து சென்றனர்

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கர்நாடகா மாநிலம் மங்களூரில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கொரோனா பீதியால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 243 மீனவர்களை 3 பேருந்துகளில் நேற்று அழைத்து வந்து கமுதி அருகே நந்திசேரி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கவைத்து, தனிமைப்படுத்தி கொரோனா பாதிப்பு உள்ளதா என்று பரிசோதிக்க முற்பட்டனர்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த மீனவர்களை இங்கு தங்க வைக்க எதிர்ப்பு தெரிவித்து பசும்பொன், நந்திசேரி, நெடுங்குளம் ஆகிய கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கல்லூரி வாசலில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கமுதி டிஎஸ்பி மகேந்திரன், தாசில்தார் செண்பகலதா ஆகியோர் மறியலில் ஈடுபட் டவர்களை சமாதானப்படுத்த முயன்றும் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பரமக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் மீனவர்களை தங்க வைப்பதாக முடிவு எடுக்கப்பட்டு, பேருந்தில் அழைத்து செல்லப்பட்ட பின்னரே மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: