பெண் டாக்டருக்கு கொரோனா அறிகுறி ஈரோடு, போத்தனூர் ரயில்வே மருத்துவமனைகள் மூடல்

* ஊழியர்கள் 25 பேர் வீட்டில் தனிமை

* சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பட்டியல் தயாரிப்பு

சேலம்: ஈரோடு, போத்தனூர் ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால், அந்த மருத்துவமனைகளில் பணியாற்றிய  25 ரயில்வே ஊழியர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் 43 வயது மதிக்கத்தக்க பெண் மருத்துவர் பணியாற்றினார். அவரை கடந்த வாரம் கோவை போத்தனூர் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்தனர். அங்கு அவர் பணிக்கு சேர்ந்தார். அப்போது அவருக்கு சளி, இருமல், காய்ச்சல் இருந்துள்ளது. உடனே கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பரிசோதித்தபோது, கொரோனா அறிகுறி இருந்ததால், அந்த பெண் மருத்துவரை தனி வார்டில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொரோனா அறிகுறி தென்பட்ட பெண் மருத்துவர், ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் பணியில் இருந்தபோது, தாய்லாந்தில் இருந்து கொரோனாவுடன் வந்த இருவருடன் இருந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அவர்களிடம் இருந்து பெண் மருத்துவருக்கு பரவியிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதனால், பெண் மருத்துவர் பணியாற்றிய ஈரோடு, கோவை போத்தனூர் ரயில்வே மருத்துவமனைகளை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் மூடியுள்ளது.

இந்த 2 மருத்துவமனைகளிலும் பணியாற்றிய நர்ஸ்கள், மருந்தாளுநர்கள், இதர ஊழியர்கள் என 25 பேரை வீட்டில் தனிமைபடுத்தியுள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா? என தொடர்ந்து மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மேலும், பெண் மருத்துவர் பணியில் இருந்த காலத்தில் ஈரோடு, போத்தனூர் ரயில்வே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

Related Stories: