செய்தி துளிகள்: கட்சி சார்புகளைக் கடந்து தேவை உள்ளவர்களுக்கு உதவ மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான டெரிக் ஓ’’பிரையன், சென்னையில் தவித்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 40 தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு தெரிவித்ததையடுத்து, அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டது என்று நன்றி தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இதனை ‘’பெருங்கடலில் ஒரு சிறு துளி’’ என்று குறிப்பிட்டு நெகிழ்ந்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ள விவரம் வருமாறு: நன்றி டெரிக் ஓ பிரையன் மற்றும் மம்தா பானர்ஜி.

இதுபோன்ற காலங்களில், அனைத்து மாநிலங்களும் எல்லைகள்- கட்சி சார்புகளைக் கடந்து பாதிப்புக்கு உள்ளாக கூடியவர்களுக்கு உதவ வேண்டும். திமுகவின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், தொண்டர்களும் தேவை உள்ளோருக்கு உதவிட வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு அறிவிப்பு கொரோனா நிவாரண பணிக்கு மக்கள் பொருளுதவி தரலாம்:

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று நோய் நிவாரண பணிக்கு பொதுமக்கள் பொருளுதவி வழங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குநர் குழந்தைசாமி, கொரோனா வைரஸ் நோய் நிவாரண பணிக்கு பொதுமக்கள் பொருளுதவி அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்படி, தற்காப்பு பொருட்களான விசை தெளிப்பான், முக கவசங்கள், காலுறைகள், துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்க பாதுகாப்பு பொருட்கள், கை சுத்தம் செய்யும் சோப், கை சுத்தம் செய்யும் திரவங்கள், கொசு வலைகள் வழங்கலாம்.

மருத்துவ உதவி பொருட்கள் என்றால், தெர்மா மீட்டர், ரத்த அழுத்த பரிசோதனை கருவி, ஸ்டெத்தெஸ்கோப், சிபிஜி கருவி, செயற்கை சுவாச கருவி (வென்டிலேட்டர்), பலவகை பரிசோதனை கருவி உள்ளிட்டவைகளை வழங்கலாம். மேற்குறிப்பிட்டுள்ள தற்காப்பு பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி பொருட்களை சம்பந்தப்பட்ட மாவட்ட துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) அவர்களிடம் நேரில் வழங்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு வீட்டுக்கு சென்று நிவாரணம் அன்புமணி கோரிக்கை:

சென்னை: கொரோனா வைரஸ் தொடர்பான நிவாரண உதவிகளை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழகத்தின் பல நகரங்களில் மளிகை மற்றும் காய்கறிகளை தொலைபேசி மூலம் அவர்களுக்கு பிடித்த கடைகளில் ஆர்டர் செய்தால், அவற்றை தொண்டு நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே கொண்டு வந்து வழங்க வகை செய்யப்பட்டிருக்கிறது.

அந்த முறையை தமிழகம் முழுவதும் நீட்டிக்க வேண்டும். அதேபோல், அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகளை மக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்க வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப் படுவதையும், மக்கள் ஒருவர் கூட வீடுகளுக்கு வெளியில் வராமல் இருப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு: முதல்வர் நிவாரண நிதிக்கு எம்பி, எம்எல்ஏக்கள் நிதியுதவி :

சென்னை: முதல்வர் நிவாரண நிதிக்கு எம்பி, எம்எல்ஏக்கள் ஒரு மாத  ஊதியத்தை வழங்குவதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழக முதலமைச்சரின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தையும், கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஓய்வூதியத் தொகையையும் அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், தரவாளர்கள், நண்பர்கள் மற்றும் தமிழக மக்களையும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமாவளவன் வலியுறுத்தல் கடன் தவணைகளை 6 மாதம் ஒத்திவைக்க வேண்டும்:

சென்னை: கடன் தவணைகளை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:  கொரோனா  பாதிப்பால் கடன் தவணைகள் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. இருந்தாலும், மார்ச் மாதத்துக்கான தவணை காலம் முடிந்துள்ள நிலையில் ஏப்ரல் மாதத்துக்கான தவணை மார்ச் 31ம் தேதி எடுக்கப்பட்டுவிடும் என்ற சூழலில் மக்களுக்கு மே மாத தவணை மட்டுமே தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது. அதாவது ரிசர்வங்கியின் அறிவிப்பில் ஒரு மாதம் மட்டுமே பயனுள்ளதாக அமையும் நிலையுள்ளது.

எனவே, இது பொருளாதார நெருக்கடியால்  பாதிக்கப்பட்டோருக்கான ஒரு நிவாரணமாக அமையாது. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது மூன்று மாதங்களுக்கும் மேல் இந்த சிக்கல் தொடரும் என்பதை ஊகிக்க முடிகிறது. எனவே குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு வங்கிக் கடன் தவணைகளை ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: