×

கொரோனா தொற்று காரணமாக தனிமையில் இருக்கக்கோரி நடிகர் கமல் வீட்டில் நோட்டீஸ்

சென்னை: கொரோனா தொற்றால் தனிமையில் இருக்கக்கோரி நடிகர் கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. சர்ச்சையை தொடர்ந்து திடீரென அந்த நோட்டீஸ் அகற்றப்பட்டது.  மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வீடு சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ளது. இந்த வீட்டின் முன் சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில், “மார்ச் 10ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை தனிமையில் இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் கமல் இல்லை. அவர் தற்சமயம் இசிஆரில் உள்ள வீட்டில் தான் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவரது ஆழ்வார்பேட்டை வீட்டில் நோட்டீஸ் ஓட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 கமல் வீட்டில் மாநகராட்சி ஒட்டிய நோட்டீஸ் பற்றிய தகவல் டிவி மூலமாக வேகமாக பரவியது. இதையடுத்து கமல் ரசிகர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் இதுபற்றி விமர்சித்து கருத்து பதிவிட்டனர். கடும் எதிர்ப்பு மற்றும் பெரும் சர்ச்சையை தொடர்ந்து நோட்டீஸை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதுகுறித்து, கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், ‘எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், ‘நடிகை கவுதமி சமீபத்தில் துபாய் சென்று திரும்பியுள்ளார். அவருடைய பாஸ்போர்ட்டில் இந்த முகவரி இருந்தது. இதனால் அந்த வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Kamal , Corona, actor Kamal, notices
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...