×

கொரோனா நோய் தடுப்பில் உண்மை நிலை அறிந்து நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும்

* முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் வேண்டுகோள்

சென்னை: கொரோனா நோய்த் தடுப்பில் மாநிலம் முழுவதும் நிலவும் உண்மை நிலையை அறிந்து நடவடிக்கைகள் எடுக்க அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பல்வேறு கட்சி தலைவர்களும் தமிழக அரசுக்கு இக் கோரிக்கையை வேண்டுகோளாக விடுத்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:   கொரோனோ நோய்த் தடுப்பில் மக்கள் இன்னும் உறுதியுடன்  சமூகத் தொடர்பிலிருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் மக்கள் மத்தியில் நிலவும் பதற்றத்தையும் பீதியையும் தணிப்பதற்குரிய தகவல்களையும் அளித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

 வெகுமக்கள் எதிர்கொள்ள வேண்டிய இந்தப் பேரிடரை ஆளுங்கட்சி மட்டும் தனித்து நின்று துடைத்துவிட முடியாது. அனைத்துக் கட்சிகளும் ஒரே நோக்குடன் ஒன்றுபட்டு ஈடுபட வேண்டிய தருணம் இது. ஆகவே அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று முதல்வவ் பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன். ஊரடங்கு நிலையில் இப்படிக் கூட்டம் கூட்ட பிரச்னை இருக்குமெனில் வீடியோ கான்பரன்ஸ் முறையில் செய்யலாம். இதன் மூலம் மாநிலம் முழுவதும் நிலவும் உண்மை நிலையை அறிந்து, சரியான தரவுகளின் அடிப்படையில், அதற்கு ஏற்றவாறு கொரோனா தடுப்புக்கு, ஜனநாயக ரீதியாக, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் முதல்வர் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், பாஜ முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு தலைவர்கள் கொரோனா தொடர்பான அனைத்து தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



Tags : party leaders ,meeting , Coroner's disease, MK Stalin, all party leaders,
× RELATED பெண்களுக்கு எதிரான கொடுமைகளை...