வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து புதிதாக வந்துள்ளவர்கள் யார்? வீடுவீடாக சென்று உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் விசாரணை

* விவரங்களை சேகரித்து சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைப்பு

சென்னை: வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து புதிதாக யாரும் தமிழகம் வந்து இருக்கிறார்களா என்பது தொடர்பாக வீடு, வீடாக சென்று உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வௌிநாட்டில் இருந்து பயணிகள் வருவதை தடுக்கும் வகையில் விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தமிழக அரசு சார்பில் மாநில எல்லைகள் மூடப்பட்டு வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்கள் இங்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாவட்ட எல்லைகளில் இருந்து பொதுமக்கள் வெளியே சென்று விடாமல் தடுக்கும் வகையில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வந்தால் அவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் தமிழகத்துக்கு வந்துள்ளனர். ஆனால், அவர்களில் தற்போது வரை 1 லட்சம் பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் 15 நாட்கள் தனிமைப்பட்டுள்ளனர்.  இது தொடர்பாக அவர்களது வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு, 15 நாட்கள் தனிமைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரானோ தொற்று இருப்பதாக சந்தேகத்தின் பேரில் சிலரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவமனையில் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்துள்ளனர். அந்த பரிசோதனை முடிவுக்கு பிறகே அவர்களை வீட்டிற்கு அனுப்ப மருத்துவர்கள் உத்தேசித்துள்ளனர்.

இந்த நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒவ்வொரு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அவர்களுக்கு அறிகுறி எதாவது இருக்கிறதா என்பது குறித்து கேட்டறிந்து வருகின்றனர். மேலும், அவர்கள் என்ன மாதிரியான உணவுகள் எடுத்து ெகாள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் பிப்ரவரி 15ம் தேதிக்கு பிறகு மற்ற மாநிலங்களில் இருந்து உள்நாட்டு விமானம் மூலம் தமிழகம் வந்தவர்கள் மட்டுமின்றி, தற்போது வெளிமாநிலத்தில் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தமிழகம் வந்துள்ளனர்.

இவ்வாறு, தமிழகம் வந்தவர்களின் பட்டியல் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் புதிதாக  வெளிநாட்டில் இருந்தோ, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தோ தமிழகத்தின் பிற பகுதிக்கு வந்துள்ளனரா என்று கேட்டறிந்து வருகின்றனர்.

 மேலும், அவ்வாறு வெளி நாட்டில் இருந்தோ, வெளி மாநிலத்தில் இருந்தோ தகவல் அளிக்குமாறு ஒவ்வொரு வீடு, வீடாக தினமும் விசாரித்து வருகின்றனர். மேலும், அவ்வாறு வெளி மாநிலத்தில் இருந்து வந்த நபர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று அவர்களுக்கு கொரோனா பாதிப்பு என்பது உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்துகின்றனர். அவர்கள், பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகே திருப்பி அனுப்பி வருகின்றனர் என்று வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: