கொரோனா பரவலின் முதல், இரண்டாம் நிலையை கடந்து 3ம் நிலையை எட்டுகிறது இந்தியா: சமூக பரவல் மூலம் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம்

* நிதி ஆயோக் சிறப்பு அதிகாரி எச்சரிக்கை

புதுடெல்லி: கொரோனா வைரஸ் முதல் மற்றும் இரண்டாம் நிலையை கடந்து, சமூக தொற்று எனப்படும் அபாயகரமான 3ம் கட்டத்தை அடுத்த 5 முதல் 10 நாட்களில் இந்தியா சந்திக்கும் என்று நிதி ஆயோக்கின் சிறப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் எச்சரித்துள்ளார். இதனால், பல லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.  கொரோனா வைரஸ் பரவலின் அபாயகரமான கட்டம் என கணிக்கப்பட்டு இருப்பது 3ம் நிலை. இதில்தான், தற்போது ஒரு சில நூறு பேருக்கு மட்டுமே தொற்றிய இந்த வைரஸ், ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர், லட்சம் பேருக்கு பரவக்கூடிய ‘சமூக தொற்று’ எனப்படும் படுபயங்கரமான நிலையை எட்டும். இந்தியா இன்னும் அந்த கொடூரமான நிலையை எட்டவில்லை. ஊரடங்கு உத்தரவு மூலம் அது கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

 இருப்பினும், ஏற்கனவே கண்ணுக்கு தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று உள்ளவர்களால், அடுத்த 10 நாட்களுக்குள் இந்த நிலை உருவாகும் என்று எச்சரிக்கிறார் கிரிதர் கியானி.   இவர், தர மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளவர். சுகாதார ஆலோசகர்கள் அமைப்பின் நிறுவனராகவும், இந்திய தர மேலாண்மை கவுன்சலின் பொது செயலாளராகவும் இருக்கிறார்.  பிரதமர் மோடி தலைமையில் கடந்த 24ம் தேதி நடந்த சுகாதாரத் துறையினருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் இவரும் ஒருவர். இவர் தற்போது கொரோனாவை எதிர்த்து போராட நிதி ஆயோக்கின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் என்ன வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கும் சூழல் நிலவுகிறது. கொரோனா பரவலில் மூன்றாவது கட்டம் என்பது மிகவும் சிக்கலானது. இந்த மூன்றாவது நிலையில் நோய் தொற்று மிக வேகமாக பரவும். யாரிடம் இருந்து பரவத் தோன்றியது என்பதை கண்டறிவது மிகவும் கடினம். இந்தியா தற்போது 3வது நிலைக்கு செல்லவில்லை என்று கூறி வந்தாலும், சமூக பரவல் என்ற மூன்றாம் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. ஆனால், தற்போது எதையும் செய்து முடிக்க போதிய நேரமில்லை. இந்தியாவில் போதுமான பயிற்சி  பெற்ற மருத்துவ பணியாளர்களோ அல்லது கோவிட்-19 சிகிச்சைக்கான மருத்துவமனைகளோ  இல்லை.

இன்னும் 5 அல்லது 10 நாட்களில் கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு கூட அறிகுறி தென்பட வாய்ப்புள்ளது. இதனால், திடீரென நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக கூடும். தற்போது காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் உள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. ஏனெனில், பரிசோதனைக்கான மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இல்லை.  மார்ச் 25ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 118 பரிசோதனை ஆய்வகங்களும், நாளொன்றுக்கு 15 ஆயிரம் நோயாளிகளை பரிசோதிக்கவும் மட்டுமே வசதி உள்ளது. இது தவிர 16 தனியார் மருத்துவமனை ஆய்வகங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் அல்லது இருமலுடன் வருபவர்களுக்கு சோதனை செய்யப்படுவதில்லை. ஆனால், அவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்க வாய்ப்புண்டு. எனவே, சோதனைக்கான போதிய மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். நோயாளிகளை கண்டறிந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

அதே போல், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் எண்ணிகையையும் அரசு அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, டெல்லி போன்ற பெருநகரங்களில் குறைந்தது 3 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தயாராக இருக்க வேண்டும். இதற்கான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும்.

மேலும். சிறிய நகரங்களில் குறைந்தப்பட்சம் 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாவது சிகிச்சைக்கு தயாராக இருக்க வேண்டும்.  மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்களை காலி செய்து விட்டு தனிமை வார்டாக மாற்றப்படுகிறது. ஆனால், இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ் அளித்து அவர்களுக்கு பயிற்சி அளித்தால் அவர்களையும் பணியில் ஈடுபடுத்தலாம்.  ஜனவரி 30ம் தேதி ஒன்றாக இருந்த கோவிட்-19 பாதிப்பு தற்போது 890 ஆக உயர்ந்து விட்டது. பலியானவர்களின் எண்ணிகையும் 20 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கொரோனாவைத் தடுக்க விரைந்து செயல்பட வேண்டிய சூழலில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காய்ச்சல், இருமல் இருந்தாலும் தொற்று இருக்க வாய்ப்புண்டு

* அடுத்த 5- 10 நாட்களில் கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கும் கூட அறிகுறி தென்பட வாய்ப்புள்ளது.

* 3ம் கட்டத்தில் காய்ச்சல், இருமலுடன் வருபவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்க வாய்ப்புண்டு.

* டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் குறைந்தபட்சம் 3,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தயாராக இருக்க வேண்டும்.

* சிறிய நகரங்களில் குறைந்த படுக்கைகளுடன் உள்ள மருத்துவமனைகளை ஒன்று சேர்த்து தொகுப்பு வார்டுகளை உருவாக்க வேண்டும்.

* மருத்துவம் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, கொரோனா சிகிச்சையில் ஈடுபடுத்தலாம்.

*  பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள் என்று தனித்தனியாக பிரித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

Related Stories: