×

ரயில் பெட்டிகளில் கொரோனா வார்டு தேவைப்படும் இடத்துக்கு செல்லும்: மாதிரி வடிவம் தயாரானது

புதுடெல்லி: ஏ.சி அல்லாத ரயில் பெட்டி ஒன்றை, மாதிரி கொரோனா வார்டாக மாற்றி அமைத்துள்ளது ரயில்வே. இந்த மாதிரி இறுதி செய்யப்பட்ட பின் கூடுதல் ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்ற ரயில்வே திட்டமிட்டுள்ளது.  நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் கொரோனா அதிகம் பரவும்போது அங்கு சிறப்பு மருத்துவமனைகளை உடனடியாக அமைக்க வேண்டும். சீனாவின் வுகான் நகரில் கொரோனா வேகமாக பரவியபோது, அங்கு தற்காலிக மருத்துவமனைகளை சீனா அவசர அவசரமாக கட்டியது. இந்தியாவில் தற்போது கொரோனா வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதை எதிர்கொள்ள இந்தியா தயாராகிக்  கொண்டிருக்கிறது.

ஏ.சி அல்லாத ரயில் பெட்டிகளை, கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் தனிமை வார்டுகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மாதிரியை தயாரிக்கும் பணி, அரியானா மாநிலம், யமுனா நகரில் உள்ள வடக்கு ரயில்வேயின் ஜகத்கிரி பணிமனையில் நடந்தது. அங்கு ரயில் பெட்டி ஒன்று தனிமை வார்டாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டியில். நடுவில் இருக்கும் பெர்த் அகற்றப்பட்டுள்ளது. லோயர் பெர்த்தில் பிளைவுட் பொருத்தப்பட்டு, காற்று நிரப்பிய திரைகள் மூலம் தனி அறையாக மாற்றப்பட்டுள்ளது.

இதேபோல், பஞ்சாப் கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை, ஜெர்மன் நிறுவனம் உருவாக்கிய எல்எச்பி ரயில் பெட்டியை மருத்துவமனையாக மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது. இந்த மாதிரிகள் விரைவில் இறுதி செய்யப்பட உள்ளன. மற்ற ரயில்வே மண்டலங்களும் ஏசி அல்லாத ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. கவுகாத்தி காமக்யாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஒரு தனிமை வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரிகள் இறுதி செய்யப்பட்டவுடன் ஒவ்வொரு ரயில்வே மண்டலமும் வாரத்துக்கு 10 ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றும்.

எந்தப் பகுதிக்கு தனிமை வார்டுகள் தேவையோ, அங்கு இந்த ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்படும் என வடக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் தீபக் குமார் தெரிவித்துள்ளார்.  இது தவிர பல ரயில்வே மண்டலங்களில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் வென்டிலேட்டர், படுக்கைகள், டிராலிகள் தயாரிக்கும் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளன. தென் மத்திய ரயில்வேயில் ஏற்கனவே முகக்கவசம், கட்டில்கள், நாற்காலிகள் ஆகியவற்றை தயாரித்துள்ளன.  2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூஎச்ஓ) மதிப்பீடு செய்ததில் இந்தியாவில் ஆயிரம் பேருக்கு 0.7 படுக்கைகளே மருத்துவமனையில் உள்ளன. ஆயிரம் பேருக்கு 3 படுக்கைகள் இருக்க வேண்டும் என டபிள்யூஎச்ஓ பரிந்துரை செய்துள்ளது. ஆயிரம் பேருக்கு 2 படுக்கைகள் இருக்கும் வகையில், படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

செய்யப்பட்டுள்ள வசதிகள்
*  ஒரு ரயில் பெட்டியில், படுக்கைகளுடன் 10 சிறிய தனி அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
*  மருத்துவ கருவிகள் மற்றும் சாதனங்களை பயன்படுத்தும் வகையில் 220 வோல்ட், 415 வோல்ட் மின்சார பிளக் பாய்ன்ட் பொருத்தப்பட்டுள்ளன.
*  4 பாட்டில்களை வைக்கும் அளவுக்கு ஹோல்டர் பொருத்தப்பட்டுள்ளது.
*  ஒரு ரயில் பெட்டியில் உள்ள 4 கழிவறைகள், 2 குளியலறைகளாக மாற்றப்பட்டுள்ளன.  2 கழிவறைகளில் இருந்து கோப்பைகள் அடைக்கப்பட்டு தரைப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
*  ஒவ்வொரு குளியலறையிலும் ஹேண்ட் ஷவர், வாளி, கப் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
*  ஒரு ஆலோசனை அறை, மருந்து கிடங்கு, ஐசியு மற்றும் பேன்ட்ரி ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

Tags : Corona Ward ,wherever , Railway Boxes, Corona Ward
× RELATED கோவை இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா...